Take a fresh look at your lifestyle.

நூறு கோடி வானவில் – விமர்சனம்

சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னாணி நடித்துள்ள 100 கோடி வானவில் திரைப்படத்தின் விமர்சனம்

23

நடிப்பு: ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, ரினில் மோகன், தம்பி ராமையா, கோவை சரளா, சின்னி ஜெயந்த், வி.ஜே. பார்வதி
இயக்கம்: சசி
இசை: சித்து குமார்
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ். குமார்
வெளியீடு: ZEE5 – நவம்பர் 6, 2026
மதிப்பீடு: 2.5 / 5

‘சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ என வித்தியாசமான கதைக்களங்களுடன் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் சசி, மீண்டும் ஒரு காதல் கதையுடன் களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘நூறு கோடி வானவில்’.

மும்பையில் தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சி இயக்குநராகப் பணியாற்றும் வினோத் (ஹரிஷ் கல்யாண்), பணியின் காரணமாக கோவாவுக்கு அனுப்பப்படுகிறார்.
அங்கு ஃபென்னி (சித்தி இத்னானி) என்ற இளம்பெண்ணைச் சந்திக்கிறார். ஃபென்னியின் வாழ்க்கையில் ஏற்கெனவே காதல் இருக்கிறது. சிறுவயது முதல் காதலித்து வந்த ரிச்சி (ரினில் மோகன்), ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருக்கிறார்.
தனது காதலன் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையில், தினமும் அவனுக்காக வீடியோக்களைப் பதிவு செய்து வருகிறார் ஃபென்னி.
இந்தச் சூழலில் வினோத்துக்கும் ஃபென்னிக்கும் இடையே நட்பு மலர்கிறது. அந்த நட்பு மெல்ல காதலாக மாறும்போது, ஃபென்னியின் வாழ்க்கையில் மிகப்பெரிய உணர்ச்சிப் போராட்டம் உருவாகிறது.

ஒருபுறம் கடந்த காலக் காதல், மறுபுறம் புதிதாக மலரும் காதல். இந்த இரண்டுக்கும் இடையில் ஃபென்னி எடுக்கும் முடிவுதான் படத்தின் மீதிக்கதை.

இதுவரை பெரும்பாலும் இளமைத் துள்ளலுடன் கூடிய கதாபாத்திரங்களில் பார்த்த ஹரிஷ் கல்யாணுக்கு, இந்தப் படம் சற்றே வித்தியாசமானதுதான்.

வினோத் கதாபாத்திரத்தின் கோபம், குடும்பப் பின்னணியால் ஏற்படும் மனக்காயம், காதலில் ஏற்படும் தடுமாற்றம் என பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது.

படத்தின் மிக முக்கியமான பலம் சித்தி இத்னானி.
காதலன் கோமாவில் இருக்கும்போதும் அவன் மீண்டு வருவான் என்ற நம்பிக்கையுடன் வாழும் பெண்ணாகவும், இன்னொரு பக்கம் புதிய காதலின் ஈர்ப்பில் மனம் தடுமாறும் பெண்ணாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அவரது முகபாவனைகளும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கின்றன.

ரிச்சியாக நடித்திருக்கும் ரினில் மோகன், தம்பி ராமையா, கோவை சரளா, சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் பங்களித்திருக்கிறார்கள். வி.ஜே. பார்வதியின் நகைச்சுவைக் காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றன.

கோவாவின் அழகைத் தனது ஒளிப்பதிவின் மூலம் ரசிக்கும்படி பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார்.
சித்து குமாரின் இசையும் பின்னணி இசையும் படத்தின் காதல் உணர்வுகளுக்கு வலு சேர்க்கின்றன.
காட்சிகளின் வண்ண அமைப்பும், கதைக்களத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவும் படத்தின் ரசனைக்கு உதவுகின்றன.

இயக்குநர் சசி இன்னும் வலுவான திரைக்கதையை அமைந்திருக்கலாம்.
ஒருவரைக் காதலித்துக் கொண்டிருக்கும் பெண்ணின் வாழ்க்கையில் இன்னொரு காதல் நுழைந்தால் ஏற்படும் மனப்போராட்டம் நிச்சயமாகப் பேசப்பட வேண்டிய விஷயம்தான்.
ஆனால் அந்த உணர்வுப்பூர்வமான கதையை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.
குறிப்பாக முக்கோணக் காதல் கதைகளில் எதிர்பார்க்கப்படும் திருப்பங்களும் உணர்ச்சிகரமான மோதல்களும் இங்கே முழுமையாகக் கைகொடுக்கவில்லை.
சில காட்சிகள் ஏற்கெனவே பார்த்துப் பழகிய காதல் படங்களை நினைவுபடுத்துகின்றன. அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை ஓரளவுக்கு முன்கூட்டியே கணிக்க முடிவதும் திரைக்கதையின் பலவீனம்.
இயக்குநர் சசியின் முந்தைய படைப்புகளில் இருந்த திரைக்கதை விறுவிறுப்பும், அழுத்தமான உணர்ச்சிகளும் இந்தப் படத்தில் இன்னும் கூடுதலாக இருந்திருக்க வேண்டும்.

காதல், நம்பிக்கை, இழப்பு, மனப்போராட்டம் என மென்மையான உணர்வுகளைக் கொண்ட ஒரு திரைப்படமாக ‘நூறு கோடி வானவில்’ உருவாகியிருக்கிறது.
ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானியின் நடிப்பு, கோவாவின் அழகு, சித்து குமாரின் இசை ஆகியவை படத்திற்குப் பலம்.
ஆனால் புதுமையான திரைக்கதையும் எதிர்பாராத திருப்பங்களும் இன்னும் வலுவாக இருந்திருந்தால், இந்த வானவில் இன்னும் அழகாக ஜொலித்திருக்கும