டாம் ஹாலண்ட் – ஜெண்டாயா திருமணம்? மொபைலுக்கு தடை, 6 கோடி செலவு!

ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதி டாம் ஹாலண்ட் – ஜெண்டாயா. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ட்ரெண்டிங் ஆகும் இந்த ஜோடி, தங்களது திருமணக் கொண்டாட்டத்தை விமரிசையாக நடத்தியுள்ளதுதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. டாம் ஹாலண்டும் ஜெண்டாயாவும் முதன்முதலில் ‘ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சந்தித்தனர்; அதில் அவர்கள் பீட்டர் பார்க்கர் மற்றும் எம்.ஜே. கதாபாத்திரங்களில் நடித்தனர். பல ஆண்டுகளாக அவர்களைக் காதல் வதந்திகள் சூழ்ந்திருந்தபோதிலும், அந்த ஜோடி தங்களை நெருங்கிய நண்பர்கள் என்றே தொடர்ந்து கூறிவந்தனர்.

2025 ஜனவரியில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில், ஜெண்டாயா ஒரு பெரிய வைர மோதிரத்தை அணிந்து கலந்துகொண்டபோது திருமணம் குறித்த யூகங்கள் தீவிரமடைந்தன. சிறிது காலத்திற்குப் பிறகு, அந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என பரபரத்தது ஹாலிவுட் வட்டாரம். சில பிரபலங்களும் அந்தத் தம்பதியினர் ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டார்கள் எனவும் பேட்டிகளில் தெரிவித்தனர். 2026 ஆஸ்கர் விருது விழாவில் ஜெண்டாயா திருமண மோதிரம் போன்ற ஒன்றை அணிந்து வந்தது அந்தச் செய்திகளுக்கு வலு சேர்ப்பதுபோல அமைந்தது.

ஆன்லைனில் பரவி வந்த AI-ல் உருவாக்கப்பட்ட திருமணப் புகைப்படங்கள் போலி என ஒரு பேட்டியில் போலிப் புகைப்படங்கள் குறித்த தனது குடும்பத்தினரின் எதிர்வினையை நினைவுகூர்ந்த ஹாலண்ட், தம்பதியரின் உண்மையான திருமணத்தில், “அவர்கள் அனைவரும் இருந்ததால்” தனது உறவினர்கள் ஏமாறவில்லை என்று நகைச்சுவையாகக் கூறினார். சமீபத்தில் மெக்சிகோ சிட்டியில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும்போது, ஜெண்டாயா சொன்ன ஒரு விஷயம் அவருக்கு திருமணம் ஆனதை உறுதி செய்வதைப்போல அமைந்தது. ஒரு ரசிகர் அவரிடம் கேலியாகத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது, ஜெண்டாயா சிரித்துக்கொண்டே, “நீங்கள் மிகவும் தாமதமாக வந்துவிட்டீர்கள்” என்று பதிலளித்தார். இதன்மூலம் அவரும் ஹாலண்டும் ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டதை உறுதி செய்து பலரும் பேசினார்கள்.

Comments (0)
Add Comment