திருமணமான பிறகு பெண்கள் மாமியார் வீட்டுக்குச் செல்வது வழக்கமாக நடப்பது. அதுவே, ஒரு ஆண் சென்றால் எப்படி இருக்கும் என்பதைச் சொல்வதுதான்
பியார் பிரேமா கல்யாணம்.
நாயகி சான்வி மேகனாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்கிறார் இளன். திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் செல்ல சான்வி மேக்னா மறுக்கிறார். சான்வி மேகனாவுக்காக, வீட்டோடு மாப்பிள்ளையாகச் செல்கிறார் இளன்.
புது மாப்பிள்ளைக்கு ஆரம்பத்தில் ஏக கவனிப்பு. இளனை உள்ளங்கையில் தாங்கும் சான்வி மேக்னாவின் தாயார் ராதிகா சரத்குமார், ஒரு கட்டத்தில் இளனை கேவலப்படுத்த தொடங்குகிறார்.பிரச்சினை வெடிக்கிறது.
இதிலிருந்து இளனை மீட்க அவரது தாயார் கீதா கைலாசம் முயற்சிக்கிறார். அதே வேளை சான்வி மேக்னாவின் மனதை மாற்றும் வேலையில் இறங்குகிறார் இளன்.
இறுதியில் என்ன ஆனது? என்பது மீதி.
இயக்குநர் – ஹீரோ என இரட்டைப் பொறுப்பு இளனுக்கு. தமிழ் சினிமாவுக்குப் பழக்கப்பட்ட சற்று அப்பாவித்தன பாத்திரம். ரசிக்கும்படி செய்திருக்கிறார். ஆனால் முக்கால் கிணறுதான்!
ஆனால் அவர் அளவுக்குக் கூட மெனக்கெடவில்லை சான்வி மேக்னா.
அடாவடி மாமியாராக ராதிகா சரத்குமார். கேட்கவா வேண்டும்.. கலக்கியுள்ளார். அவரது நடிப்பு படத்துக்கு பெரும் பலம்
எம்.எஸ்.பாஸ்கர்,கீதா கைலாசம், இளங்கோ குமரவேல் உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பு. செந்தில், யோகிபாபு, மாறன் நகைச்சுவை ஓகே.
தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவில் படம் வண்ணமயமாய் ஜொலிக்கிறது.
யுவன் சங்கர் ராஜாவிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்தோம். ஆனாலும் படத்துக்கு தேவையானதைக் கொடுத்திருக்கிறார்.
கலகலப்பான காட்சிகள் படத்துக்குப் பலம். ஆனால் இதுபோன்ற கதைகளை ஏற்கெனவே ரசிகர்கள் பார்த்துவிட்டனர்.திரைக்கதையில் இன்னும் வேகம் இருந்திருக்கலாம். 2-ம் பாதியில் நீளமான பல காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம். லாஜிக் மீறல்களும் ஏராளம்.