நடிகர்கள்: அருள்நிதி, கிஷோர், ஜெயப்பிரகாஷ், பவித்ரா மாரிமுத்து
ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்
இசை: ரான் ஈத்தன் யோகன்
தயாரிப்பு: கதிரேசன்
எழுத்து – இயக்கம்: இன்னாசி பாண்டியன்
திகில் பட வரிசையில் இன்னொரு வரவாக வந்திருக்கிறது டைரி படம்.
பயிற்சி முடித்த உதவி ஆய்வாளர்களிடம், ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு கேஸை ஒப்படைக்க உத்தரவிடுகிறார் உயர் அதிகாரி. அதன்படி கண்ணை மூடிக் கொண்டு ஒரு கோப்பை எடுத்துத் தருகிறார் அருள்நிதி. அது 16 ஆண்டுகளுக்கு முன்பு உதகையில் நடந்த ஒரு கொலை வழக்கு. விசாரிக்கச் சென்றால் பல திடுக்கிடும் நிகழ்வுகளும், அதிரடி சம்பவங்களும் அரங்கேறுகின்றன. கொலையை துப்புத் துலக்கினாரா அருள்நிதி என்பதே மீதி.
இந்த வகைப் படங்கள் அருள்நிதிக்கு ரொம்பவே பழகிப்போனது என்பதால், மிக இயல்பாகச் செய்திருக்கிறார். அருள்நிதியின் தோற்றம், உடல்மொழி எல்லாமே இந்தப் படத்தில் மிகக் கச்சிதம். குறை சொல்ல முடியாத நடிப்பு.
அறிமுக நடிகை பவித்ராவுக்கு பெரிதாக வேலை இல்லை. முதல் காட்சியில் குறிப்பிடும்படி இருந்தாலும், பின்னர் வழக்கமான காதலி வேடம் அவருக்கு.
ஷாரா, சாம்ஸ் இருவரும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். இரட்டை அர்த்த வசனங்கள் சிரிப்பை வரவழைக்கும் என இன்னும் நம்பிக்கொண்டிருப்பதுதான் காமெடி.
ஜெயப்பிரகாஷ், கிஷோர், தனம் போன்றோர் கவனம் ஈர்க்கிறார்கள்.
முதல்பாதி சற்று பொறுமையைச் சோதிக்கிறது. பெரும்பாலான காட்சிகள் பேருந்திலேயே நடப்பதாகக் காட்டுவதால் சலிப்புத் தட்டுகிறது, ஆனால் அதையே இரண்டாம் பாதிக்கான வலுவான அடித்தளமாக்கியிருப்பது சிறப்பு. அதேபோல இரண்டு வெவ்வேறு காலகட்டங்களை வேறுபடுத்திக் காட்டுவதில் இயக்குநர் காட்டியிருக்கும் கவனம் பாராட்டத்தக்கது.
படத்தின் கணிணி வரைகலையில் (சிஜி) இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும்பலம். அதேபோல ரான் ஈத்தன் யோகனின் பின்னணி இசை.
திரைக்கதை மற்றும் பட உருவாக்கத்தில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஆனாலும் படத்தின் இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு திகில் காட்சிகள், முதல் பாதியின் சொதப்பலை மறக்க வைத்துவிடுகிறது.

























