சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்து, ஜூலை 14-ம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
மடோன் அஸ்வினின் முந்தைய படமான ’மண்டேலா’ வித்தியாசமான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
நேற்று (ஜூலை 14) திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரூ.35 கோடி முதல் ரூ.40 கோடிக்குள் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படம் ஃபேன்டஸி ஆக்ஷன் டிராமா ஜானரில் முக்கியமான விஷயத்தை கதைக்களமாக கொண்டுள்ளது.
இந்நிலையில், படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.7 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் படம் ரூ.9.50 கோடியை இப்படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக அளவில் மொத்தம் 11.05 கோடிகளை இந்தப் படம் வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான படங்களில் 4வது பெரிய ஆரம்ப வசூல் செய்த படமாக மாறியுள்ளது மாவீரன். சிவகார்த்திகேயன் திரைவாழ்வில் அதிகபட்ச முதல் நாள் வசூலும் இந்தப் படம்தான் என்கிறார்கள்.

























