சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அஙஅகு அவருக்கு சிகிச்சை முடிந்துள்ளது. இப்போது ரஜினி உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கூலி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், அடிவயிற்றில் வலி மற்றும் லேசான நெஞ்சு வலி காரணமாக திங்கள்கிழமை இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்தார். இதற்கு அவர் ஏற்கெனவே மருத்துவமனையில் முன்பதிவு செய்திருந்தார்.
அவருக்கு வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. செவ்வாய்க்கிழமை அதிகாலை அவருக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை செய்யப்பட்டது. அடிவயிற்றில் ரத்த நாளத்தில் அவருக்கு சிறிய குழாய் பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சை மிக நல்லவிதமாக நடந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சிகிச்சை முடிந்தபிறகு சிலமணி நேரம் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவு கண்காணிப்பில் வைத்துள்ளனர். நாளை அவர் சாதாரண பிரிவுக்கு மாற்றப்படுவார் என்றும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிகிறது.

























