சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘இந்தியன்-2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘இந்தியன்-2’ படத்தின் அறிமுக விடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
‘எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன். இந்தியனுக்கு அழிவே இல்லை” என்று தொடங்கும் அறிமுக வீடியோவில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், மனோபாலா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், இந்த அறிமுக வீடியோவை இந்தி மொழியில் நடிகர் அமீர்கானும், தெலுங்கில் இயக்குநர் ராஜமவுலியும், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப்பும் வெளியிட்டனர்.
இந்நிலையில் அறிமுக வீடியோவை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதனை தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இதில் “சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே, வணக்கம் இந்தியா, இந்தியன் இஸ் பேக்” என்று பதிவிட்டுள்ளார்.

https://x.com/ikamalhaasan/status/1720422248501162474?s=20
எப்படி இருக்கு அறிமுகம்?
இந்த அறிமுக வீடியோவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. சிலர் அருமையாக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கமலின் வயதான தோற்றம், கிராபிக் காட்சிகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் முதல் பாகத்தில் இருந்த எழுத்தாளர் சுஜாதாவின் பங்களிப்பு இந்த இரண்டாம் பாகத்தில் இல்லாததை உணர முடிவதாகத் தெரிவித்துள்ளனர்.

























