நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா
இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன், சி ஜே குட்டப்பன், அஞ்சல் உதயகுமார்
தயாரிப்பு: விசாரத் கிரியேஷன்ஸ்
இயக்கம்: அனில் வி நாகேந்திரன்
தமிழ் நாடு மற்றும் கேரளாவில் கம்யூனிச இயக்கம் எப்படி உருவானது, அதற்கு அடித்தளமிட்ட தலைவர்கள் பற்றிச் சொல்லும் திரைப்படம் வீர வணக்கம்.
கம்யூனிச இயக்கத்தின் அடித்தளமாகக் திகழ்ந்த புரட்சி வீரர் பி கிருஷ்ணப் பிள்ளை, அவருடன் இணைந்து பண்ணையார்களுக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்த ஏ கே ஜி, இ எம் எஸ் நம்பூதிரிபாட் உள்ளிட்ட தலைவர்கள் எப்படி அடிமைப்பட்டுக் கிடந்த விவசாயத் தொழிலாளர்களை போராளிகளாக மாற்றினார்கள் போன்றவற்றை, அதே காலப் பின்னணியில் காட்சிப் படுத்தி உள்ளனர்.
கிருஷ்ணப் பிள்ளையாக வரும் சமுத்திரக்கனி, மாறுபட்ட நடிப்பைத் தந்திருக்கிறார். அவரது தோற்றம் 1940 – 45 காலகட்டத்துக்குப் பொருத்தமாக மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பணக்கார கம்யூனிஸ்டாக வரும் பரத், நன்றாகவே செய்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில்.

கம்யூனிச போராளியாக நடித்திருக்கும் ரித்தேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, புரட்சி பாடகி பி.கே.மேதினி, ஆதர்ஷ், ஆஷ்விகா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அந்தந்த
பாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.
கவியரசுவின் ஒளிப்பதிவு அந்த காலக்கட்டத்தை கண் முன் காட்டுகிறது.
ஜமீன்தார்களிடமும், பண்ணையார்களிடமும் சிக்கி விவசாயத் தொழிலாளர்கள், குறிப்பாக இளம் பெண்கள் பட்ட கொடுமைகளை மிக யதார்த்தமாக காட்டியுள்ளனர்.
படத்துக்கு 5 இசை அமைப்பாளர்கள். பல காட்சிகளில் வசனமே கேட்காத அளவுக்கு இசை அமைத்துத் தள்ளிவிட்டார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் அனில் வி.நாகேந்திரன், பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக, சினிமாத்தமில்லாமல் படைதிருக்கிறார்.
வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், இந்தத் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றைத் தந்திருப்பதற்காக, வீர வணக்கம்!

























