சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற மிகப் பெரிய வெற்றிப்படத்தை 2021ல் கொடுத்தார் ரஜினிகாந்த். சமூக வலைதள விமர்சனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது அந்தப் படம்.
ரஜினியின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்குவார் என்று கூறப்பட்டுவந்தது. அதே சன் பிக்சடர்ஸ் தயாரிக்கக் கூடும் என்றும் பேசப்பட்டது.
ரஜினியை அடுத்து இயக்கப் போகும் இயக்குநர்கள் என்ற பட்டியலில் இடம்பெறாத முன்னணி இயக்குநர்களே இல்லை என்ற அளவுக்கு தினமும் ஒரு இயக்குநர், தயாரிப்பாளர் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
முதலில் தேசிங் பெரியசாமி – ஏஜிஎஸ் என்றார்கள். அடுத்து, சன் பிக்சர்ஸ் பேனரில் கேஎஸ் ரவிக்குமார், நெல்சன், கார்த்திக் சுப்பராஜ் பெயர்கள் செய்திகளில் வந்தன. பின்னர் இளையராஜா தயாரித்து இசை அமைக்க, பால்கி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்று சில தினங்கள் பரபரப்பாக செய்திகள் வந்தன.
நேற்றும் இன்றும் இரு வெவ்வேறு செய்திகள்.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பது உறுதி என்று ஒரு சாராரும், கலைப்புலி தாணு – இளையராஜா கூட்டுத் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்று இன்னொரு தரப்பும் செய்திகள் பரப்பினர்.
இதுகுறித்து கலைப்புலி தாணுவிடமே தொடர்பு கொண்டு நாம் விசாரித்தோம். அவர் கூறுகையில், “அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை. முற்றிலும் தவறான தகவல்”, என்றார் உறுதியாக.

























