லண்டன்: கொரோனா தாக்கம் குறைந்த பிறகு இங்கிலாந்தில்தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் இப்போது இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல ஐரோப்பிய நாடுகள், அந்த கடுமையாக தொற்றக்கூடிய புதிய கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதித்துவிட்டதால், பண்டிகை காலத்தில் பிரிட்டன் கிட்டத்தட்ட மொத்த ஐரோப்பாவிலிருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, பல்கேரியா, ஜேர்மனி, பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள், குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு பிரிட்டன் விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வர தடை விதித்துள்ளன, சில நாடுகள் புத்தாண்டு வரை தடை விதித்துள்ளன.
இந்த வரிசையில், இஸ்ரேல், துருக்கி, மொராக்கோ, குவைத், சவுதி அரேபியா மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளும் இணைந்துகொண்டுள்ளன.
பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் இந்தியா வர நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் டிசம்பர் 31 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

























