புது டெல்லி: நாட்டின் 80வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் 13வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுதந்திர விழா கோலாகலமாக நடைபெற்றது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்வதில் இளைஞர்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையிலும் இந்தாண்டு சுதந்திர தின விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செங்கோட்டைக்கு வருகைத்தந்த பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார்.
தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக வந்தே மாதரம் பாடத்தில் 150வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக முதன்முறையாக சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடம் இசைக்கப்பட்டது.
கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து தேசியக் கீதம் இசைக்கப்பட்டு, இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடி பறக்க மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், 2,500 என்சிசி உறுப்பினர்கள், எனது பாரத் தன்னார்வலர்கள் மற்றும் 5,000 மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக வந்தே மாதரம் பாடப்பட்டு, தேசிய கீதம் பாடப்பாட்டது.
சுதந்திர தின விழாவில் உரையில் பிரதமர் மோடி, ஐந்து புதிய அணுமின் உலைகள், ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி, போட்டித் தேர்வு இளைஞர்கள் இலவச ஆன்லைன் பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.