தமிழ் ஓடிடி உலகில் பல வித்தியாசமான தொடர்களைத் தந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர். முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா ஜேகே, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.
இத்தொடரில் இளம் நடிகர்களான தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நவம்பர் 18 முதல் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஒரு தனியார் மாலில், பொதுமக்கள் மத்தியில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குநர் மிருதுளா ஸ்ரீதரன் பேசுகையில், “இந்த விழா இவ்வளவு பெரிய அரங்கில் நடப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த ஐடியா விதையாக இருந்த போதே எங்களை நம்பி வாய்ப்பளித்த, உடனிருந்து உருவாக்கிய ஜீ5 மற்றும் சிஜு மற்றும் கௌஷிக் ஆகியோருக்கு நன்றி. இந்த தொடரில் உழைத்த குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள்,” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், “டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை ஏனென்றால் டான்ஸை வைத்து ஒரு தொடர் உருவாக்குவது மிகக் கடினம் அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு,” என்றார்.
இயக்குநர் பாலா பேசுகையில், “எனது உதவியாளர் மிருதுளா இந்த தொடரை இயக்கியுள்ளார். அவருக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இந்த தொடர் பார்க்க நன்றாக உள்ளது. தொடரில் பங்குகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்,” என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில், “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் டான்ஸ் ஸ்டெப். இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்தத் தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. இயக்குநர் விஜய் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்,” என்றார்.
இயக்குநர் விஜய் பேசுகையில், “பாலா சார் எனது மானசீக குரு அவர் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்த தொடருக்கு மூன்று ஹீரோ பரேஷ் ஜீ, சாம் சிஎஸ், மதன் கார்க்கி மூவரின் பங்களிப்பும் அற்புதம். சந்தீப்பின் ஒளிப்பதிவு மிக தரமானதாக இருந்தது. பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இந்த மாதிரி தொடர் இந்தியாவில் இது தான் முதல் முறை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்,” என்றார்.
டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர், இசையமைப்பாளர் சாம் சிஎஸ், நடன இயக்குநர்கள் ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் ஆகியோரும் வாழ்த்திப் பேசினர்.

























