சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. கொரோனா அச்சம் காரணமாக இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால், இந்த படம் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஆன்லைனில் வருகிற 30-ந்தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் விமானப் படையில் இருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ் தாமதமாக கிடைத்ததால் தள்ளி வைத்துள்ளனர். தீபாவளியையொட்டி ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்து 39-வது படமாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து தயாராகும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்த நிலையில் சூர்யா நடிக்கும் 40-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் தனிப் பெயர் பெற்றவர் பாண்டிராஜ். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
சூர்யாவின் கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் பாண்டிராஜ். இப்போது சூர்யாவின் இந்தப் படத்தையும் அதே பாணியில் எடுப்பார் என்று தெரிகிறது. கடந்த வருடம் இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நம்மவீட்டு பிள்ளை என்ற குடும்பப் படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

























