டெல்லி: இந்தியாவில் 80 மற்றும் 90-களில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்திய இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனையில் இருந்த லஹிரி நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நள்ளிரவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பை கிரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பப்பி லஹிரி 1973-ம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் 1985-ம் ஆண்டு வெளியான பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பப்பி லஹிரி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அபூர்வ சகோதரிகள், கிழக்காப்ரிகாவில் ஷீலா ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.
‘பப்பி தா’ என செல்லமாக அழைக்கப்பட்ட பப்பி லஹிரி, இந்தியில் சல்தே சல்தே, ஷராபி, டிஸ்கோ டான்சர், டான்ஸ் டான்ஸ், நமக் ஹலால், தானேதார், பேவாஃபா, மாஸ்டர்ஜி, கமாண்டோ, கேங் லீடர் என பல மெகா ஹிட் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
ஷராபி படத்துக்காக பிலிம்பேர் விருதினைப் பெற்ற பப்பி லஹிரி, 2018-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.
நகைகள் அணிவதில் பெருவிருப்பம் கொண்ட பப்பி லஹிரி, தனது கழுத்து மற்றும் கைகளில் ஏராளமான நகைகள் மற்றும் வாட்ச் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கடைசியாக தமிழில் கருப்பம்பட்டி என்ற படத்துக்காக 2013-ம் ஆண்டு ஒரு பாடல் பாடினார் பப்பி லஹிரி. இந்தியில் கடைசியாக அவர் இசையமைத்த படம் பாகி 3. இந்தப் படத்துக்காக அவர் ஒரு பாடலை இசையமைத்துப் பாடியிருந்தார்.
2014-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்த பப்பி லஹிரி, மேற்கு வங்க மாநிலம் ஸ்ரீராம்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.

























