மாஸ்கோ: ரஷிய அதிபர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என பைடன் அழைப்பது மன்னிக்கக்கூடிய விஷயமல்ல என்று ரஷியா தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என பகிரங்கமாக அறிவித்தார்.
இதற்கு ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தனது குண்டுகளால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த அமெரிக்காவின் அதிபர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என அழைப்பது ஏற்புடையதல்ல, மன்னிக்கக்கூடியதும் அல்ல,” என்று கூறினார்.
முன்னதாக, ‘ரஷிய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி’ என்ற தீர்மானத்தை ஏக மனதாக அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்த நிலையில், அதிபர் பைடனும் புதினை அவ்வாறே கண்டித்து பேசினார்.
அமெரிக்காவின் நட்பு நாட்டுத் தலைவர்கள் சிலரும், புதினை ‘போர்க் குற்றவாளி’ எனக் கூறிய நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் அப்படிச் சொல்ல மட்டும் தயக்கம் காட்டினார். அவ்வாறு அழைக்க சில சர்வதேச விசாரணைகள் நடைபெறுவது அவசியம் என்று கூறிவந்தார்.
இந்நிலையில், நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அனுப்பிய ‘ரஷிய தாக்குதலுக்கு உள்ளான உக்ரேனிய குடிமக்களின் நிலை’ பற்றிய காணொளிக் காட்சிகளின் தொகுப்பு அமெரிக்காவிற்கு காட்டப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த பின் அதிபர் பைடன் புதினை கடுமையாக தாக்கி அவரை ஒரு ‘போர்க் குற்றவாளி’ என்று முதன்முறையாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

























