நடிகர்கள்: சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல், மோகன் பாபு
ஒளிப்பதிவு: நிகேத் பொம்மிரெட்டி
இசை: ஜிவி பிரகாஷ்
தயாரிப்பு: 2டிஎன்டர்டெயின்மென்ட்
இயக்கம்: சுதா கொங்கரா
பணக்காரர்களுக்கு மட்டுமே வசப்பட்டுக் கொண்டிருந்த விமானப் பயணத்தை. சாமானிய மக்களுக்கும் சாத்தியமாக்கிக் காட்டிய ஒரு சாதனையாளரின் உண்மைக் கதைதான் சூரரைப் போற்று. கொஞ்சம் பிசகினாலும் வெறும் டாகுமென்டரியாகப் போயிருக்கும் வாய்ப்புள்ள ஒரு கதையை, சுவாரஸ்ய சினிமாவாக்கி ஜெயித்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
ரயில்கள் கூட நிற்காமல் செல்லும் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு பள்ளி ஆசிரியரின் மகன் சூர்யா. ரயிலுக்காக நடக்கும் போராட்டத்தில் தந்தையுடன் கருத்து வேறுபட்டு, வீட்டை விட்டு வெளியேறி விமானப்படையில் சேர்கிறார் சூர்யா. தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, கையில் பணம் இல்லாததால் விமானத்தில் வர முடியாமல் போகிறது. தந்தையின் இறுதிச் சடங்கில் கூட அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
இதன் விளைவு, வசதி படைத்தவர்கள் மட்டும் பறக்கும் விமானத்தில், சாமானியர்களும் பயணிக்க வேண்டும் என்ற பெருங்கனவு பிறக்கிறது சூர்யாவுக்கு. ஒரு குறைந்த கட்டண விமான சேவையைத் தொடங்கத் திட்டமிடுகிறார். அது நடைமுறைக்கு வரும்முன் அவர் சந்தித்த சவால்கள், தடங்கல்கள். சூழ்ச்சிகள்… இறுதியில் அவர் எப்படி தன் கனவை நனவாக்குகிறார் என்பதுதான் படம்.
கதையின் நாயகன் நெடுமாறன் ராஜாங்கமாக வாழ்ந்திருக்கிறார் சூர்யா. மிகக் கச்சிதமான வேடப் பொருத்தம்.. கோபம், விரக்தி, வெறுப்பு, காதல், பாசத் தவிப்பு, இயலாமை, வலி என அத்தனை பரிமாணத்தையும் நடிப்பில் கொணர்ந்திருக்கிறார். சமகால நடிக நாயகர்களில் யாரோடும் ஒப்பிட முடியாத நேர்த்தியான கலைஞன் சூர்யா என்பதே மிகையில்லாத உண்மை.
நாயகியாக வரும் அபர்ணா பாலமுரளி பக்குவமான நடிப்பைத் தந்திருக்கிறார். படத்தில் நெகிழ வைக்கும் இன்னொரு பாத்திரம் ஊர்வசி. நடிப்பு ராட்சசி!
தந்தையாக வரும் பூ ராமு, கருணாஸ், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
படம் முழுக்க ஹீரோ சூர்யாவின் உழைப்புக்குப் பின்னால், இயக்குநர் சுதா கொங்கராவின் அசாதாரண வேலை தெரிகிறது. தனிமனித துதியாக இல்லாமல், பார்க்கும் அத்தனைப் பேரும் அதை தங்களின் அனுபவமாகவே கருதும்படி திரைக்கதையை அமைத்திருப்பதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இப்போதெல்லாம் ஜிவி பிரகாஷ் பின்னணி இசையில் நிறையவே மெனக்கெடுவது தெரிகிறது. அசுரனுக்குப் பிறகு கவனம் ஈர்த்த இசை இந்தப் படத்தில். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு அபாரம். சவாலான வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்.
இது ஆகச் சிறந்த படைப்பா என்று கேட்டால், ஆம் என்று சொல்ல முடியாதுதான். ஆனால் இன்றைய சூழலில் இந்த மாதிரி மாறுபட்ட படைப்புகள்தான் தமிழ் சினிமாவை உயிர்ப்புடன் வைக்க உதவும். அதனால் படத்தின் சின்னச்சின்ன குறைகளை கடந்து, நிறைகளைப் பேசுவோம்.
சூரரைப் போற்று… சிம்ப்ளி ஃப்ளை… சிம்ப்ளி சூப்பர்!
மதிப்பீடு: 4.0/5.0
- எஸ்எஸ்

























