நடிகர்கள்: சிலம்பரசன், சித்தி இட்னானி, ராதிகா
ஒளிப்பதிவு: சித்தார்த்தா நுனி
இசை: ஏஆர் ரகுமான்
தயாரிப்பு: ஐசரி கே கணேஷ்
திரைக்கதை, இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்
பிழைப்புக்காக மும்பைக்குப் போகும் தூத்துக்குடி மாவட்டத்தின் ஒ்ரு சிறுகிராமத்து இளைஞன், வாழ்க்கைப் போராட்டத்தில் பல எதிர்ப்பாராத திருப்பங்களில் சிக்குகிறான். அவற்றிலிருந்து எப்படி தப்பிக்கிறான், தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான் என்பதுதான் வெந்து தணிந்தது காடு படத்தின் ஒரு வரிக்கதை.
படத்தின் விமர்சனத்துக்குப் போகும் முன், ஆங்காங்கே சில கௌதம் மேனன்தன காட்சிகள் இருந்தாலும், இது வழக்கமான கௌதம் மேனன் படமல்ல என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
தூத்துக்குடி கிராமம் ஒன்றின் புழுதிக் காட்டில் ஆரம்பிக்கிறது படம். அந்தக் கிராமத்தில் தொடர்ந்து வாழ முடியாத சூழலில் மும்பைக்கு ரயிலேறுகிறான் 21 வயது முத்து வீரன். மும்பை ரயில் நிலையத்தில் இறங்கி, பரோட்டா கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து அந்த இளைஞனின் ஓட்டம் தொடங்குகிறது. அந்த ஓட்டம் அவனைப் பின்னோக்கிப் பார்க்கவோ, திரும்பிச் செல்லவோ விடவே இல்லை. ஒரு சூழலில் கையில் இரும்பை (துப்பாக்கி) எடுக்கிறான். அதையும் கீழே போடும் சந்தர்ப்பமே அவனுக்கு வாய்ப்பதில்லை. இதுதான் இந்தக் கதையின் அடிநாதம். இதைச் சிதைக்காமல் திரைக்கதை அமைத்திருந்தால் இந்தப் படம் வேறு ஒரு தளத்துக்குப் போயிருக்கும். ஆனால் முதல் பாதி ஒரு மாதிரியாகவும், இரண்டாம் பாதி அதற்கு நேர்மாறாகவும் அமைந்திருப்பதால், படம் எப்போதுதான் முடியும் என்ற அயற்சிதான் வருகிறது.
படத்தின் ஆகப் பெரும் பலம் சிம்புதான். மிகச் சிறப்பான உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். 40 வயதுக்காரர் ஒருவர் 21 வயது பையனாக நடிப்பது பெரிதில்லை. ஆனால் அதை நம்ப வைக்கிற அளவுக்கு நடிப்பதுதான் பெரிய விஷயம். அதைச் செய்து காட்டியிருக்கிறார் சிம்பு. மீசை தாடியில்லாத நடுவக்குறிச்சி பையன், லேசான தாடி மீசையுடன் வரும் டானின் பாதுகாவலன், பின்னர் அடர்ந்த தாடியுடன் வரும் பெரிய டான் என மூன்று படிநிலைகளை மிகக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறார் சிம்பு.
நாயகியாக வரும் சித்தி இட்னானிக்கு பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் கவர்கிறார், குறிப்பாக அந்த காதல் காட்சியில், சிம்பு தன்னை பெண் கேட்கும் காட்சிகளில்.

சிம்புவின் தாயாக வரும் ராதிகா, மும்பை தாதாக்களாக வரும் சித்திக், அடியாட்களில் அப்புக்குட்டி, செல்போனில் குடும்பம் நடத்தும் அந்த தாடிக்கார இளைஞன் உள்ளிட்டோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
படத்தின் முக்கிய குறை, கர்ஜி குழுவும் குட்டி பாய் கும்பலும் எதற்காக அடித்துக் கொள்கிறார்கள் என்பதே சொல்லப்படவில்லை. முத்து வீரனை முன்னிலைப்படுத்தும் மும்முரத்தில் இந்த பலமிக்க டான்களை டம்மிகளாக்கிவிட்டதில், படத்தின் தீவிரத்தன்மையே போய்விடுகிறது. இரண்டு டான்களின் முழுநேர வேலையே செக்ஸ், பெண்களைத் தேடிப் போவது. அதிலும் குட்டிபாய் இன்னொரு படி இறங்கி ஹோமோ என சித்தரித்திருப்பதில் அந்த இரு டான்களும் காமெடிப் பீஸ்களாகிவிடுகின்றன.
சிம்புவுக்குப் பிறகு படத்தில் சொல்லிக் கொள்ளும்படி இருப்பது ஏஆர் ரகுமான் இசை. மறக்குமா நெஞ்சம், உன்னை நெனச்சதும் (கொடி அசைந்ததும்… சாயல்), காலத்துக்கும் நீ வேணும், மறக்குமா நெஞ்சம்… பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக அந்த மல்லிப்பூ பாடல் ரொம்ப நாளைக்குப் பிறகு ரகுமானின் ப்ளாக்பஸ்டர் பாட்டு.
சித்தார்த்தாவின் ஒளிப்பதிவு, படத்தின் தன்மையை கடைசி வரை அப்படியே பராமரிக்க உதவுகிறது.
முதல் பாதியில் பரோட்டா கடை காட்சிகள் அங்காடித் தெருவை நினைவூட்டுகின்றன. அதேமாதிரி தூத்துக்குடி வட்டார வழக்கை இன்னும்கூட நெருடல் இல்லாத மாதிரி பேச வைத்திருக்கலாம். இரண்டாம் பாதியில் இன்னும் சிரத்தையெடுத்து காட்சிகளை நுணுக்கமாகக் காட்டியிருந்தால் இந்தப் படம் சிம்புவின் திரை வாழ்க்கையில் பெரும் வெற்றிப்படமாகி இருக்கும்.
Rating: 3.0/5.0

























