மைக்கேல் படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இந்த நிகழ்வில், தயாரிப்பாளர் சிவி குமார் பங்கேற்றுப் பேசுகையில், “படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.
தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில், “சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் ரஞ்சித் ஜெயக்கொடி பயணிக்கிறார். அவர் அதிகமாக நேரம் எடுத்து தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குகிறார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். சந்தீப் உடைய திறமைக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரவில்லை என்றுதான் கூற வேண்டும். அவர் இன்னும் பல வெற்றிப்படங்களைக் கொடுக்க வேண்டும். இப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்,” என்றார்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசுகையில், “ரஞ்சித், லோகேஷ் போன்ற இயக்குநர்களுடன் பயணிக்கும்போது எனக்கு சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கிறது, நிறைய புது விஷயங்களைச் செய்ய முடிகிறது. இந்த படம் மனித உணர்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தில் அம்மா செண்டிமெண்ட் ஆழமாக இருக்கிறது. ரஞ்சித் உடைய அனைத்து படத்திலும் எமோஷன் இருக்கிறது. உலகின் சிறந்த படங்கள் அனைத்திலும் எமோஷன் இருக்கும். இந்த படத்தில் ஆக்சன், எமோஷன், காதல் என அனைத்தும் இருக்கிறது. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும்,” என்றார்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது, “எனக்கு எந்த சிக்கலும் இல்லாமல், படத்தை இப்பொழுதும் இருக்கும் தரத்திற்கு எடுத்து வர, தோள் கொடுத்தவர் தயாரிப்பாளர்கள்தான். அவர்களால்தான் இந்த மைக்கேல் படம் இப்படி உருவாகி இருக்கிறது. இந்தhd படத்தில் மைக்கேல் கதாபாத்திரம் அனைத்து உணர்வுகளையும், வார்த்தைகள் இல்லாமல் கொடுக்க வேண்டும், அதை சந்தீப் சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் ஆழமாகவும், உண்மையாகவும் இருக்கக் கடின உழைப்பைச் சண்டை இயக்குநர் கொடுத்துள்ளார். சாம் சிஎஸ் எப்பொழுதும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பார், அவர் இந்தப்படத்திலும் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரது பங்கும்தான் இந்தப் படத்தை மேம்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, என்னுடைய நல்ல நண்பர். இந்தப் படத்தில் ஒருசிறப்புத் தோற்ற கதபாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதி சாரிடம் கேட்ட போது, அவர் உடனே பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார்.
கௌதம் சார் படங்களைப் பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது. அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார். மைக்கேல் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்.
நிகழ்ச்சியில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, நடிகைகள் தீப்சிகா, திவ்யான்ஷா உள்ளிட்டோரும் பேசினர்.
நிறைவாக படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் பேசுகையில், “இந்த படத்திற்கு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர் பரத்தான் எங்களுக்கு உத்வேகம் அளித்து, எங்களது இந்த கனவை இப்பொழுது மைக்கேலாக மாற்றியுள்ளார். சாம் சிஎஸ்சுக்கு இன்னும் பெரிய வரவேற்பு கிடைக்க வேண்டும், அவர் பெரிய இடத்தை அடைய வேண்டும், அவர் உடைய உழைப்பு அளப்பரியது. ரஞ்சித் ஒரு மனிதராக நல்ல குணம் கொண்டவர், அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி. மைக்கேல் படம் எனக்குக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. மொழி தாண்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகி வழங்கியுள்ளார். கௌதம் சாரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். இப்போது அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர், பிஸியான நேரத்தில் அவர் எங்களுக்காக அவருடைய தேதிகளை ஒதுக்கி, இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருக்கு எங்களது நன்றிகள். நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். பின்னர் அவர் படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் பிடித்து இருந்தது. இந்த படத்துக்கு உங்களது ஆதரவு தேவை. இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி,” என்றார்.
ராஜன் ராதா மணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார்.
இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சண்முகா சினிமாஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

























