அடிலெய்டு: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244- ரன்கள் எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது.
இந்திய அணியில் உமேஷ் யாதவ், நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரின் பிரமாதமான பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தடுமாறினர். அதேபோல், அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விழிபிதுங்கினர். அவரின் மாயாஜால சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 72.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டி பெய்ன் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடியது.
பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஜோடி மீண்டும் மோசமான துவக்கம் கொடுத்தது. பிரித்வி 4 ரன் எடுத்து போல்டானார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்து, 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மயங்க் அகர்வால் (5), ‘நைட் வாட்ச்மேன்’ பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய வீரர்களின் விக்கெட் மளமள வென சரிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் 3 வது நாளில் இந்தியா 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது ஷமி காயம் காரணமாக வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசல்வுட் 5 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமேகொடுத்து 5விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துளார்.
இதற்கு முன் 1974 ஆம் ஆண்டில் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் மிகக் குறைந்த ரன் 42 ஆகும். அந்த மோசமான சாதனையை இன்று இந்தியா முறியடித்தது.
ஆஸ்திரேலியா அணியின் வெற்றி பெற 90 ரன்கள் தேவைப்பட்டது. இந்த இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எடுத்து வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலியா.
உலகின் நெம்பர் 1 டெஸ்ட் அணி என்ற பெருமையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ள இந்திய அணி, இன்று படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோற்றது.

























