மறைந்தார் சாலமன் பாப்பையா
புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ் ஆர்வலருமான சாலமன் பாப்பையா இன்று காலமானார்.
மதுரை: தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலகுறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 90.
மதுரை மாநகராட்சி பள்ளியில் படித்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். மதுரை ஞானஒளிவு புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இனிய தமிழில் எல்லோரையும் கவரும் வகையில் நகைச்சுவையாக பேசுவதில் அவர் திறமை வாய்ந்தவராக இருந்தார்.
சமூகத்திலும, ஒவ்வொருவரது வீடுகளிலும் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை சுவாரசியமாக நடத்துவதில் வல்லவர். பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, கடல் கடந்தும் தமிழ் மொழியை வளர்த்தவர்.
பேச்சாற்றலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சாலமன் பாப்பையா, ரஜினிகாந்தின் சிவாஜி உள்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்திய அரசின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது 2021-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
நெஞ்சு வலி காரணத்தால் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது மறைவுக்கு தமிழ் ஆர்வலர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.