நடிகர்கள்: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான்
ஒளிப்பதிவு: ஹரீஷ் கண்ணன்
இசை: ஏஆர் ரகுமான்
தயாரிப்பு: லலித் குமார்
எழுத்து இயக்கம்: அஜய் ஞானமுத்து
சிறிய வயதிலேயே சர்வதேச அளவில் தொழில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்கிறார் ரோஷன் மேத்யூ. தொழிலை விரிவாக்க ஏகப்பட்ட சட்டவிரோத வேலைகளைச் செய்ய, பல நாடுகளிலும் அவரது தொழில்கள் முடக்கப்படுகின்றன. இதற்குக் காரணமானவர்களை கொல்லத் திட்டமிடுகிறார். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல… ஸ்காட்லாந்து இளவரசர், ரஷ்ய ராணுவ அதிகாரி… இப்படி எல்லாருமே பெரிய ‘கைகள்’. இவர்களைக் கொல்லும் கருவிதான் கோப்ரா விக்ரம். இந்தக் கொலைகளைச் செய்ய விக்ரமுக்கு ரோஷன் மேத்யூ நேரடியாக ஆணையிடுவதில்லை. அவர் சுரேஷ் மேனனிடம் சொல்ல, அவரோ உள்ளூரில் பத்திரிகையாளராக இருக்கும் கேஎஸ் ரவிக்குமாரிடம் பொறுப்பை ஒப்படைப்பார். கேஎஸ் ரவிக்குமார்தான் இந்தக் கொலைகளைச் செய்யும் வேலையை விக்ரமிடம் தருகிறார். கணித முறையில் இந்தக் கொலைகளைச் செய்கிறார் விக்ரம்.
இந்தக் கொலைகளைத் துப்பறியும் சர்வதேச காவல் அதிகாரியாக இர்பான் பதான். கொலைகார கோப்ராவை அவர் கண்டறிந்தாரா இல்லையா என்பது மீதி.
சற்றே நீ..ளமான இந்தக் கதையை பார்க்க வைப்பதே விக்ரமின் தேர்ந்த நடிப்பு. ஏழு வித்தியாசமான தோற்றங்களில் வரும் விக்ரம் தான் போட்ட வேடத்துக்கு நியாயம் செய்கிறார். வெறும் மாறுவேடப் போட்டியாக இல்லாமல், உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் தன் அனுபவ முத்திரையைப் பதிக்கிறார் விக்ரம்.
விக்ரம் இணையாக வரும் ஸ்ரீநிதி ஷெட்டி. பெரிதாகக் கவரவில்லை. காரணம் வலுவற்ற பாத்திரப் படைப்பு. முதன்மமையான எதிர்நாயகன் வேடம் ரோஷன் மேத்யூவுக்கு. அவர் தோற்றம், நடிப்பு இரண்டுமே அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்தவில்லை.
மீனாட்சிக்கு குறிப்பிடும்படியான வேடம். மிருணாளினி, ரோபோ சங்கர், கேஎஸ் ரவிக்குமார் பாத்திரங்கள் இன்னும் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

சர்வதேச காவல் அதிகாரியாக இர்பான் பதான். முதல் படம். அவரது தோற்றமும் நடிப்பும் ஏற்கும்படி உள்ளன. நம்பிக்கையான எதிர்காலம் உள்ளது இந்திய கிரிக்கெட்டின் இந்த முன்னாள் ஆல்-ரவுண்டருக்கு.
கோப்ராவைப் பிடிக்க நியமிக்கப்படும் தமிழ்நாட்டு காவல் அதிகாரி ஜான் விஜய்யைப் பார்த்த உடனே, அவர் வில்லனின் கையாள் என்பது புரிந்துவிடுகிறது.
ஏஆர் ரகுமான் இசையும், ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவும் படத்தைப் பார்க்க வைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
கணித முறையில் ரொலை செய்யும் காட்சிகளை இன்னும் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கலாம். அடுத்து, விக்ரம் – ஸ்ரீநிதி காதல் காட்சிகளில் ஒரு ஈர்ப்பின்மையை உணரமுடிகிறது.
பிரமாண்ட படமாக்கம், விக்ரமின் விசாரணைக் காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கும்படி உள்ளன. சில குழப்பமான காட்சிகளைத் தவிர்த்திருந்தால் (இப்போது 30 நிமிடக் காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன) கோப்ரா, கோபுரமாய் நின்றிருக்கும். ஆனாலும் விக்ரம் என்ற மகா கலைஞனின் நடிப்புக்காக இந்தக் கோப்ராவைப் பார்க்கலாம்.

























