சென்னை: அரசியல் கட்சியை ஆரம்பித்தபிறகு தொடர்ந்து அதிமுக அரசை தாக்கிப் பேசி வருகிறார் கமல்ஹாஸன். அதிமுக தரப்பினர் முதலில் கமல் ஹாஸனை கண்டு கொள்ளாமல்தான் இருந்தனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் கமல் ஹாஸனுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முதல்வர் பழனிசாமியே கமல் ஹாஸனுக்கு அரசியல் பேச தகுதியில்லை, அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்து குடும்பங்கள் நாசமாகின்றன என ஒரு போடு போட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், “முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது மகிழ்ச்சி,” என்று கூறிய கமல் ஹாஸன், தன் ட்விட்டர் பக்கத்தில் எம்ஜிஆர் புகழ்பெற்ற பாடலான நான் ஆணையிட்டால் பாடலின் சில வரிகளைப் பதிவிட்டிருந்தார். இன்று மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “‘‘நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? #நான்_கேட்பேன்,’’ எனத்தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் பெருமளவில் முதல்வர் பழனிசாமியின் உறவினர்கள், நண்பர்களுக்கே வழங்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை மறைமுகமாகக் குறிப்பிட்டே கமல் ஹாஸன் இப்படி பதிவிட்டுள்ளார்.

























