டெல்லி: அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் முடிவு எடுப்பது தொடர்பாகவும், ஆளுநரிடம் கோப்புகள் தேங்கி நிற்பது தொடர்பாகவும், பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்ற நீதிபகள் தெரிவித்துள்ளனர்.
“இந்த விவகாரத்தில் மிக விரைவாக ஆளுநர் முடிவை எடுக்க வேண்டும் என கடந்த முறை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அதன் மீதான பதில் என்னவானது?” என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு, இவ்விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரே இறுதி முடிவெடுக்க வேண்டும். ஆளுநர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை குடியரசுத் தலைவரால் அறிவிக்க முடியும். அரசியல் சாசன விதி 72ன் கீழ் இந்த முடிவை செய்ததாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பேரறிவாளனை ஏன் உடனடியாக விடுதலை செய்யக்கூடாது? இந்த விவகாரத்தில் சுமார் 27 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார். யார் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்ற பிரச்சினையில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்? அவருக்கு ஏன் இவ்வளவு சிக்கல் ஏற்படுத்துகிறீர்கள்?” என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
“பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின் படி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும்.
இதையெல்லாம் தவிர்க்க, ஆளுநர், குடியரசுத் தலைவர், அதிகாரம் குறித்த விஷயங்களுக்கு போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது? பேரறிவாளனை நாங்களே விடுவித்து இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம்,” என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. அதனால், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை மத்திய அரசு கொண்டு வரவேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

























