கமல் ஹாஸன், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் கவுரவ வேடத்தில் சூர்யா நடித்த விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ம் தேதி உலகெங்கும் வெளியானது. இதற்கு முன் கமல் நடித்த எந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்தத் தலைமுறை ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்ததால், கிட்டத்தட்ட கமல் ஹாஸனை ஒரு தலைமுறை ரசிகர்களே மறந்துவிட்ட நிலையில், மீண்டும் அதிரடியாக விக்ரம் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார் கமல் ஹாஸன்.
பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், உலகெங்கும் கிட்டத்தட்ட ரூ 200 கோடிக்குமேல் வசூலித்துள்ள விக்ரம் படம், கமல் ஹாஸனுக்கு புதிய உற்சாகத்தைத் தந்துள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவரது உதவி இயக்குநர்கள், சிறப்புத் தோற்றத்தில் நடித்த சூர்யா என பலருக்கும் மன மகிழ்ச்சியுடன் பரிசுகளை வாரி வழங்கி வருகிறார் கமல். கூடவே, பாதியில் நினறுபோயுள்ள தனது படங்களை மீண்டும் தொடங்கி வெளியிடுவதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கின்றான், இந்தியன் 2 போன்ற படங்கள் கமல் ஹாஸனால் கடந்த சில ஆண்டுகளில் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பாதியில் நிற்கின்றன.
இவற்றில் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும், விக்ரம் படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகள் நடப்பதாகவும் கமல் ஹாஸன் நேற்று அறிவித்தார்.
இவை மட்டுமல்ல, தேவர் மகன் 2க்கான பணிகளையும் ஆரம்பிக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தில் கமலுடன் கைகோர்க்கவிருப்பவர் விக்ரம் என்பது இன்னொரு சிறப்பு.
விக்ரம் படத்தின் வெற்றி தந்த உற்சாகம், கமல் ஹாஸன் என்த பெரும் கலைஞனை மீண்டும் முழு வீச்சில் திரைத்துறையில் இயங்க வைத்துள்ளது.

























