சென்னை: கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில், பி வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட படம் சந்திரமுகி. சென்னையில் மட்டும் 850 நாட்களுக்கும் மேல் ஓடியது. துவரை இந்தப் படத்தின் சாதனையை எந்தப் படமும் முறியடிக்கவில்லை.
இந்தப் படத்துக்கு இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இயக்குநர் பி வாசு இறங்கினார். கன்னடத்தில் அவர் இயக்கிய ஆப்தமித்ரா படம்தான், தமிழில் சந்திரமுகியானது. கன்னடத்தில் ஆப்தமித்ராவுக்கு இரண்டாம் பாகத்தை ஆப்தரக்சகுடு என்ற பெயரில் பி வாசு உருவாக்கினார். இந்தப் படமும் பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தை சில மாற்றங்களுடன் சந்திரமுகி இரண்டாம் பாகமாக உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் பி வாசு. ஆனால் அந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பமில்லை என ஆரம்பத்திலேயே ரஜினி கூறிவிட்டார்.
எனவே சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிப்பார் என்று இரு ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது.
இப்போது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சந்திரமுகி 2-ம் பாகத்தை பி வாசு இயக்க, லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். வடிவேலு முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்புப் பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தின் மாபெரும் வசூல் சாதனையைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ படத்திற்கு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிப்பதால், ‘சந்திரமுகி 2’ படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் போதே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.


























