விஜித் நடித்துள்ள டைட்டில் என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், பேரரசு, நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.பாக்யராஜ், சின்ன திரைப்படங்கள் வெற்றியடைய வேண்டும். அதற்கு தமிழக அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக நான்கு திரையரங்குகொண்ட மல்டிபிளக்ஸில் ஒரு திரையரங்கை சிறிய படங்களுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.
அது போன்ற நிலை ஏற்பட்டால் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் நிச்சயம் வெற்றி அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது:
“நான் ரஜினிகாந்தை வைத்து 25 படங்களையும், கமல்ஹாசனை வைத்து 10 படங்களையும், சிவாஜி கணேசனை வைத்து 3 திரைப்படங்களையும் இயக்கியுள்ளேன். அதேபோல் மற்ற நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளேன். மொத்தமாக 70 திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன்.
ஆனால் இன்றைய இயக்குநர்கள் நான்கு, ஐந்து திரைப்படங்களோடு நிறுத்திக் கொள்கின்றனர். அத்துடன் அவர்கள் கதை முடிந்துவிடுகிறது. அதற்கு காரணம் அவர்கள் எழுதுவது குறைவாக உள்ளது. மேலும் அவர்களுக்கு ஒரு சொற்றொடரைக் கூட எழுதத் தெரியவில்லை
எனவே, தற்போது வரும் இயக்குநர்கள் எங்களை மிஞ்சி திரைப்படங்களை எடுக்க வேண்டும். 80 படங்கள், 100 படங்கள் என அவர்கள் சாதனைப் படைக்க வேண்டும். அதற்கு அவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.”

கிரிவலம் திருப்பாச்சி ஆன கதை…
இயக்குநர் பேரரசு பேசும்போது, தன்னுடைய திருப்பாச்சி திரைப்படத்தின் தலைப்பு பற்றிய சுவாரஸ்ய கதையை கூறினார். அந்தத் திரைப்படத்திற்கு 150 தலைப்புகளை எழுதியதாகவும், அதில் திருப்பாச்சி என்ற பெயர் இல்லை எனவும் தெரிவித்தார். அந்த 150 தலைப்பில் இருந்து கிரிவலம் என்ற தலைப்பை தேர்வு செய்து நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியபோது அவர்களுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் அந்த தலைப்பை பதிவு செய்ய சென்றபோது வேறு ஒரு இயக்குநர் அதே தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தார். அதை தங்களுக்குக் கொடுக்குமாறும், அதற்கு பணம் கொடுப்பதாகவும் கூறினோம். ஆனால் அந்த இயக்குநர் மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் வேறு தலைப்பைத் தேடினோம்.
அது குறித்த யோசனையில் இருந்தபோது தொலைக்காட்சியில் தாஜ்மஹால் படத்தில் இடம்பெற்ற திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா என்ற பாடல் ஒளிபரப்பானது. அதைப் பார்த்தே திருப்பாச்சி என்று தலைப்பு வைத்தோம். அந்த தலைப்பு கிரிவலத்தைவிட நடிகர் விஜய்க்குப் பிடித்துவிட்டது எனத் தெரிவித்தார்.
தலைப்பு யோசிக்க வைக்கணும் – பாக்யராஜ்
கே.பாக்யாராஜ் பேசுகையில், “ஒரு படத்தின் தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுவே மக்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்க்கும். குறிப்பாக பெண்களை ஈர்க்கும் வண்ணமே ஒரு தலைப்பு இருக்க வேண்டும் என்று அந்த காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது. எனது படத்தில் கூட நிறைய எதிர்மறை தலைப்பு வைக்கின்றேன் என பல்வேறு விதமான விமர்சனங்கள் எனக்கு எதிராக வரும். ‘சுவரில்லா சித்திரம்’ என்ற படம் இது போன்ற எதிர்மறை அலைகளை மீறி வெற்றி பெற்றது. எனது அனைத்து படங்களிலும் தலைப்பு என்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும், அதே சமயத்தில் மக்களை யோசிக்க வைக்கும் வண்ணம் இருக்கும். இந்த படத்தின் தலைப்பும் ‘டைட்டில்’ என்று இருப்பது யோசிக்க வைக்கிறது. நிச்சயம் படமும் வெற்றி பெறும்,” என்றார்.
பாப்கார்ன் வாங்காதீங்க
நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசுகையில், “ஒரு படத்தைக் காப்பாத்தனும்னா அது தமிழ்நாட்டு மக்களால் மட்டுமே முடியும். எல்லாரும் படத்த திரையரங்கில் பாக்கணும், ஓடிடியில் பாத்தா வேலைக்கு ஆகாது. ஆனா, திரையரங்கம் சென்றால் படம் பார்த்து விட்டு வர வேண்டுமே தவிர, பாப்கார்ன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு கஷ்டப்பட வேணாம்,” என்றார்.
மேலும் இயக்குநர் ஆர்வி உதயகுமார், நடிகர் – தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ், இசையமைப்பாளர் அனல் ஆகாஷ், நடிகர்கள் மைம் கோபி, மிரட்டல் செல்வா, பெசன்ட் ரவி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
டைட்டில் படத்தை ரகோத் விஜய் இயக்கியுள்ளார். அனல் ஆகாஷ் இசையமைத்துள்ளார். டில்லி பாபு தயாரித்துள்ளார்.

























