சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தொடங்கி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களான எழும்பூர், சிந்தாதரிப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி, புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர்மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வானம் மேகம் கவிந்து இருப்பதால், சூரிய வெளிச்சமின்றி அரை இருளாகவே உள்ளது.
வட மாவட்டங்கள் மட்டுமின்றி, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று பிற்பகல் இரு ஏரிகளிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,.

























