கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 61-ம் நாளான நேற்று, ஒவ்வொரு போட்டியாளரையும் தனியறைக்கு அழைத்து, “நீங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இந்த 60 நாட்க ளில் சாதித்தது என்ன… பிக்பாஸ் வீட்டுக்கு உங்கள் பங்களிப்பு என்ன?” என்று ரசிகர்களுக்கு கூறுமாறு பிக்பாஸ் கேட்டார்.
அதற்கு ரமேஷ், ஷிவானி, கேபி, ஆஜீத், சோம், நிஷா, ரம்யா ஆகியோர் என்ன கூறுவது என்று தெரியாமல் திணறினர்.
அனிதா, “நான் அனைவருக்கும் ஹெயர் ஸ்டைல் செய்து கொடுத்தேன்,” என்று கூற, இது ஒரு சாதனையா என மூக்கறுத்துவிட்டார் பிக்பாஸ்.
அதேபோல ஷிவானியிடம் கேட்டபோது, அவரிடம் உருப்படியாக ஒரு பதிலும் வரவில்லை. அழகாக உடை உடுத்துவதும், டான்ஸ் போடுவதும்தான் உங்கள் சாதனையா என கேட்டு விழிபிதுங்க வைத்தார் பிக்பாஸ்.
அதே போல ரம்யாவைக் கேட்டதற்கு, அவருக்கும் சொல்ல பதிலே இல்லை. முகம் வெளிறி திருதிருவென விழித்தார்.
நிஷாவோ, தான் பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பதாக கூசாமல் ஒரு பெரும் பொய்யைச் சொல்ல, பிக்பாஸ் கனத்த அமைதி காத்தார். இதில் நொந்துபோன நிஷா, பிக்பாஸ் என்னால எதுவும் சொல்ல முடியல என்று ஜகா வாங்கினார்.
தனியறையில் என்ன நடந்தது என்று வெளியில் மற்ற போட்டியாளர்களிடம் சொல்லக் கூடாது என்பது பிக்பாஸ் நிபந்தனை என்பதால், அறைக்குள்ளிலிருந்து வெளியில் வந்தவர்கள் சொல்லி வைத்த மாதிரி, ஏதோ டெஸ்ட் எடுத்ததாகக் கூறினார்கள். அதில் சோம் சொன்னதுதான் இந்த நிகழ்ச்சியின் உண்மைத் தன்மையைக் கூறுவதாக அமைந்தது. அது, “பேன்டை அவுத்துட்டாங்க”!
இதுவரை நடந்த பிக்பாஸ் போட்டிகளிலேயே முதல்முறையாக, இந்த சீசனில்தான் போட்டியாளர்களை இப்படி ஒரு சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் பிக்பாஸ். காரணம், இந்த சீசன் போட்டியாளர்கள் யாருமே ரசிகர்களைக் கவரும் வகையில் நடந்து கொள்ளாமல், எப்போதும் வம்பு, சண்டை, வெட்டிப் பேச்சு, போலித்தனம் கொண்டவர்களாக இருப்பதுதான் என்பது பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
– அனி

























