நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டு மாதங்களாக வேலை நிமித்தம் மீண்டும் சாலிகிராமத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். சாலிகிராமம் எனக்கு தாய்வீடு மாதிரி. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காலத்தில் குறைந்தபட்சம் நமது இருப்பாவது சினிமாக்காரர்களோடு இருக்க வேண்டுமென ஆசைப்பட்டு, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சாலிகிராமத்தில் வீடு எடுத்து தங்கினோம். அதுவும் காவேரி தெருவில் சரியாக ’காவேரி கார்னர்’ டீக்கடைக்கு அருகில். இரை தேடிப் பறக்கிற பல்வேறு பறவைகள் ஓய்வெடுக்க அமர்கிற ஒற்றைப் பெருமரம் போன்றதுதான் ’காவேரி கார்னர்’. எந்த வேலையுமின்றி, உணவுக்கு வழியில்லாத நிலையிலும் ’அவநம்பிக்கை’ என்கிற வார்த்தையைக் கூட கேள்விப்படாமல் கிட்டத்தட்ட அதனை மறந்து போயிருந்த காலம் அது.
சாலிகிராமத்தின் அனைத்து தெருக்களிலும் நம்பிக்கை என்பது வற்றாத ஜீவநதியாக கண்ணுக்குத் தெரியாமல் கரைபுரண்டு ஓடுவதை ஒவ்வொரு சினிமாக்காரனும் கண்டிப்பாக உணர முடியும். சுற்றிலும் அவநம்பிக்கையும் உளச்சோர்வும் மிகுந்திருக்கும் இப்பேரிடர் காலத்தில் இயற்கை என்னை இயல்பாக சாலிகிராமத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
கொரோனா காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. பல்வேறு மக்களின் அடிப்படை வாழ்வாதாரமே சீர்குலைந்திருக்கிறது. அதில் திரைப்படத்துறையும் விதிவிலக்கல்ல. இதிலும் பலரது வாழ்க்கையையும் அடியோடு புரட்டிப் போட்டிருக்கிறது கொரோனா. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கு சுற்றுகிறேன். எல்லாத் தெருக்களிலும் தெரிந்த முகங்கள்… நன்கு பழகி இடையில் தொடர்பறுந்து போன நண்பர்கள்… வாகனத்தில் நம்மைத் தாண்டிச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து, “என்ன சார், நல்லாருக்கீங்களா? உங்கள மறுபடியும் பாப்பேன்னு நான் நெனைக்கவே இல்ல சார். மொதல்ல ஃபோன் நம்பரக் குடுங்க” என விழிப்புணர்வையும் மறந்து கை குலுக்கும் கலைஞர்கள்…💙
“என்ன பாஸ், எல்லாம் போச்சா?” என்பதெல்லாம் இங்கே சாதாரண நகைச்சுவை. பல ஆண்டுகள் இத்துறையில் போராடி ஒரு நடிகராகவோ அல்லது உதவி இயக்குநராகவோ ஒரு நல்ல நிலையை அடைந்த பலரையும் பரமபத விளையாட்டின் உச்சியில் இருக்கும் பாம்பைப் போல் கொத்திக் கீழே வீழ்த்தியிருக்கிறது கொரோனா. அவர்கள் மீண்டும் தங்களது ஆட்டத்தை முதலிலிருந்து ஆட வேண்டும். ஆடுவார்கள்.
எனக்கு நன்கு தெரிந்த நடிகர் ஒருவர் ரோட்டில் பிரியாணிக் கடை போட்டிருக்கிறார். பேரிடர்க் காலத்தில் வாடகை பாக்கி மட்டும் 42,000 ரூபாயாம். கடந்த நான்கு மாதங்களாக தினசரி பிரியாணிக் கடை நடத்தியதில் முக்கால்வாசிக் கடனை தற்போது அடைத்துவிட்டதாகக் கூறி சிரிக்கிறார். இன்னொரு நடிகர் சைக்கிளில் தினமும் பருப்பு வடைகளும் சமோசாவும் விற்கிறார். சிலர் மாஸ்க் விற்கிறார்கள். சிலர் நண்பர்களுடன் சேர்ந்து சின்னச் சின்ன தொழில்களைச் செய்கிறார்கள். இப்படி எண்ணற்ற திரைக்கலைஞர்கள் இந்த சாலிகிராமத்தில் தினசரி பிழைப்புக்காக வெவ்வேறு தொழில் செய்வதை அன்றாடம் பார்த்தபடிதான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒருவர் முகத்தில் கூட கவலையின் ரேகைகள் இல்லை.
மற்ற தொழிலைப் போல் இல்லை சினிமா. நான் கண்டிப்பாக இதனைப் பெருமையாக மட்டுமேதான் சொல்கிறேன். ஒரு உண்மையான சினிமாக்காரனால் எந்த வேலையையும் சிறப்பாகச் செய்ய முடியும். செய்ய வேண்டுமென முடிவெடுத்துவிட்டால் தெரியாத வேலையையும் சரியாகக் கற்றுக்கொண்டு செய்வான். சினிமா என்பது அனைத்தும் சேர்ந்ததுதான். ஒவ்வொரு சினிமாக்காரனுமே கிட்டத்தட்ட ஒரு போராளிக்கு நிகரானவன். எந்தப் பின்புலமுமின்றி, ஊரை விட்டு, குடும்பத்தை விட்டு, காதலியை, நண்பர்களை விட்டு லட்சியத்திற்காக இத்துறைக்கு வந்து செயலாற்றுதலென்பது ஓர் மாபெரும் போராட்டம். ஒரு உதவி இயக்குநர் தனது குடும்பம், நண்பர்கள் உட்பட சக உதவி இயக்குநர்கள், கலைஞர்கள் என ஒவ்வொரு நாளும் பலருடன் பல்வேறு விதங்களில் போராடியபடியேதான் இருக்க வேண்டும். படப்பிடிப்புத் தளம் எல்லாம் கிட்டத்தட்ட போர்க்களம்தான்.
தெரிந்தோ தெரியாமலோ சினிமாக்காரர்களாகிய நாங்கள் அனைத்து விதமான போராட்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் பழகியிருக்கிறோம். தற்போதைய பிழைப்புக்காக சமோசா விற்பவருக்கும் பிரியாணி விற்பவருக்கும் தெரியாதா என்ன, ”கூடிய விரைவில் எல்லாம் மாறும். அதன் பின் நமக்கும் நல்வாய்ப்புகள் அமையும்” என்று. அந்த நம்பிக்கையால் மட்டுமேதான் இத்துறை இத்தனை ஆண்டுகாலம் பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
கூடிய விரைவில் எல்லாம் சரியாகி மீண்டும் இந்தக் கலைஞர்களின் முகங்களை நாம் திரையரங்குகளில் பார்த்து கைதட்டத்தான் போகிறோம். அப்போது உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம்தான். உங்களுக்கு அவர்கள்தான் இவர்கள் எனத் தெரியாது. எனக்கு இவர்கள்தான் அவர்கள் எனத் தெரியும். எனவே உங்களை விடவும் கூடுதல் மகிழ்வுடன் அப்போது எனது கைகளைத் தட்டுவேன்.
உண்மையில் சினிமா என்பது சினிமாவுக்குள் அல்ல. சினிமாவுக்கு வெளியேதான் இருக்கிறது உண்மையான சினிமா 💚
– அருண்

























