வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். ஆனால் இப்போதைய அதிபரான ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வந்தார். தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வரும் ட்ரம்ப், தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகளையும் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யவதற்கு டொனால்ட் ட்ரம்ப் சம்மதித்து இருக்கிறார். அதே நேரம் தாம் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக அவர் இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை.
அதிபர் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்ப்பேன் என உறுதியாகக் கூறியுள்ள போதும், பைடன் அதிபர் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் அரசு அமைப்பிடம் டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்து இருக்கிறார்.
அதிகார மாற்றத்தை முன்னின்று செய்யும் ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு, ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாகத் தெரிவித்திருந்தது. ட்ரம்பால் நியமிக்கப்பட்ட இதன் நிர்வாகிகள் இதற்கு முன்பு வரை ஜோ பைடனை தேர்தல் வெற்றியாளராக உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, அதிபருக்கான அதிகார மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த நடவடிக்கைகளை ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு தொடங்கும் என்றும் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் அணியினர், இந்த அதிகார மாற்றத்தின் தொடக்கத்தை வரவேற்று இருக்கிறார்கள்.

























