சென்னை: வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 27 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையிலிருந்தே மழை விட்டுவிட்டு பெய்தது. மாலைக்குப் பிறகு இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது.
சென்னையில் இன்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை நகரின் பல இடங்களில் லேசான மழையே பெய்து கொண்டிருந்தது. மாலை மீண்டும் சென்னையில் பல கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
சென்னை பாலவாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், பெருங்குடி, திருவான்மியூர்,கிண்டி, ஈக்காட்டு தாங்கல், வண்டலூர், சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், மீனம்ப்பாக்கம், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மதுராந்தகம். செய்யூர் போன்ற நகரங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

























