வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது. புயல் மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய இயான் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80க்கு மேல் அதிகரித்துள்ளது. தேச வரலாற்றில் மிக மோசம் என்ற அளவிலான தரவரிசையில் இந்த சூறாவளி புயல் இடம் பெற்றுள்ளது.

“இந்தப் பேரழிவிலிருந்து புளோரிடாவைக் கட்டமைக்க சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகும். இது புளோரிடாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல, அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடி” என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு பேரழிவை ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரும் புதன்கிழமை புளோரிடா செல்ல உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று ப்யூர்டோ ரிகோ தீவுகளுக்குச் சென்று இயான் சூறாவளி சேதங்களைப் பார்வையிடுகிறார் ஜோ பைடன்.

























