சென்னை: 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் முக ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசனே முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. ரஜினி தரப்பில் இருந்து இன்னும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதற்கேற்ப கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முன்னோட்டமாக தற்போது திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது.
விஜய்தான் தமிழகத்தின் வருங்கால முதல்வர் என்று குறிப்பிடும் வகையில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா புகைப்படங்களுடன் விஜய் புகைப்படத்தை அச்சிட்டு, ‘இருபெரும் தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வரும், இளம் தலைவரே நாளைய தமிழக முதல்வரே, 2021 உங்கள் தலைமையில் அமையட்டும், தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்…’ என போஸ்டர் அச்சிட்டு இருந்தனர்.
இதனை திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கத்தினர் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளை, விஜய் தனது பனையூர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம், அரசியல் கட்சி குறித்த எதிர்பார்ப்பு, குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிர்வாகிகளுடன் விஜய் பேசுகையில் மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள், வழக்கம்போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும். தேவையற்ற போஸ்டர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என அவர்களிடம் விஜய் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
நான்கு மாவ்ட ரசிகர்களை முதல்கட்டமாக விஜய் சந்தித்துள்ளதால், மற்ற மாவட்ட ரசிகர்களும் ஏக எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

























