தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி இயக்குநராக உள்ள ஷங்கர் மகள் அதிதி, புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
கார்த்தி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு விருமன் என்று தலைப்பிட்டுள்ளனர். குட்டிப் புலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் இந்தப் படத்தில், அதிதியின் கதாபாத்திரம் வீரம் கொண்ட கனமான கதாபாத்திரமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்துக்காக அதிதி நடிப்பு பயிற்சிகள் எடுத்து தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.
விருமன் படத்தை நடிகர் சூர்யா – ஜோதிகா தங்களின் 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோரும் நடிக்கின்றனர். முத்தையா இயக்கத்தில் ஏற்கனவே கொம்பன் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. நடிகர் சிவகுமார், அவர் மனைவி லட்சுமி, இயக்குநர் ஷங்கர், அவர் மனைவி ஈஸ்வரி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தேனியில் செப்டம்பர் 18 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

























