மறைந்த மக்கள் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ எனும் பெயரில் படமாகிறது. இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா.
தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் இந்தப்படத்திற்காக 48 நாட்கள் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார். மறைந்த பிரபல நடிகரும் பசும்பொன் தேவருடன் இணைந்து பயணித்தவருமான லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரனின் மகன் SSR கண்ணன் இந்தப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உறுதுணை வகித்துள்ளார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் அரவிந்தராஜ் பேசும்போது, “இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாகவே இருந்தேன். காரணம் ஏற்கனவே புகழ்பெற்ற, ‘போற்றிப் பாடடி பெண்ணே..” பாடலை மிஞ்சும் விதமான ஒரு பாடலை தர, அவரால் மட்டும்தான் முடியும்..இத்தனை வருடங்களில் அவருடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுதான். இந்த படத்தில் நீங்கள் இசையமைக்க ஒப்புக்கொண்டால் அதுவே எனக்கு 60 சதவீத வெற்றி என அவரிடம் கூறினேன். அவரும் புன்னகைத்தபடியே, “இனி வரும் நாட்களில் எங்கெங்கும் தேவர் பற்றிய புகழ் பாடப்படும் வேண்டும் என்றால் அது இந்த படத்தின் பாடல்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு சிறப்பாக பாடல்களை உருவாக்கி தருகிறேன்” என உறுதியளித்தார்..
பசும்பொன் தேவராக மாறி இருக்கும் நாயகன் ஜெ.எம்.பஷீர் பேசும்போது, “இந்த படத்திற்காக எனக்கு பசும்பொன் தேவர் மேக்கப் போட்டபோது என்னாலேயே நம்ப முடியவில்லை.. அதன்பிறகுதான் தேவர் அய்யாவை பற்றிய புத்தகங்களை தேடித்தேடி படித்தேன் அதன்பிறகு தேவரின் பாதையை பின்பற்றவும் ஆரம்பித்தேன். இந்த படத்தில் நடிப்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தேன்.

இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகியபோது,, என்னை பார்த்ததும் நீங்கள் தேவர் போலவே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.. தேவர் பற்றிய உண்மையான நிகழ்வுகளை படமாக்குவீர்களா என்று கேட்டார். அவரிடம் நாங்கள் உறுதி அளித்தோம். மேலும் தனது முதல் படமாக நினைத்து இதற்கு அற்புதமாக இசையமைத்து தருவதாகவும் இசைஞானி இளையராஜா வாக்களித்தார்,” என்று பேசினார்.

























