ஜீவா, திஷா பாண்டே நடிப்பில், இ இப்ராகிம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் படம் கொம்பு. பன்னீர் செல்வம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை மாலை சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரஜினி கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.
அவர் பேசுகையில், “நான் கலந்து கொள்ளும் இரண்டாவது திரைப்பட நிகழ்வு இது. நிறைய விழாக்களுக்கு என்னை அழைத்தாலும் அவற்றில் நான் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிடுவது வழக்கம், ஆனால் நண்பர், சகோதரர் ஜீவாவுக்காக நான் இந்த விழாவுக்கு வந்தேன். இந்தத் திரையுலகில் இத்தனை இளம் வயதில் ஒருவர் காமராஜரின் பக்தனாக வாழ்வது பெரிய அதிசயம். ஜீவா அப்படி ஒரு அதிசயமான இளைஞர். அதுமட்டுமல்ல, எனக்கு யோகா கற்றுத் தந்த வேதாத்ரி மகரிஷியை குருவாக ஏற்றுக் கொண்டவர். அவர் எனக்கு நண்பர் மட்டுமல்ல, சில நேரங்களில் ஆலோசனை கூடக் கூறுபவர்.
ரஜினிகாந்துடன் பேசும்போது அவர் உச்சரிப்பு, உடல் மொழி, உபயோகிக்கும் வார்த்தைகள் எப்படி இருக்குமோ, அதையெல்லாம் ஜீவாவுடன் பேசும்போதும் உணரலாம். காரணம் தனது தலைவர் ரஜினிகாந்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டவர் அவர். ஏற்காட்டை ஏழைகளின் ஊட்டி என்பார்களே, அப்படி, இந்த ஜீவா ஒரு சின்ன ரஜினி. அவரை வைத்துப் படம் பண்ண முடியாதவர்கள், இந்த சின்ன ரஜினியை வைத்து தாராளமாக படம் பண்ணலாம்,” என்றார்.

நாயகன் ஜீவா பேசுகையில், “இந்த விழாவுக்கு அய்யா தமிழருவி மணியன் வந்திருப்பது நான் செய்த பாக்கியம்,” என்றார். திரையரங்குகளில் படங்கள் வெளியாகி, மக்கள் அதை தயக்கமின்றிப் பார்க்கும் நிலையை தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் ஆர்கே சுரேஷ், செயலாளர் ராதாகிருஷ்ணன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், நடிகர் கஞ்சா கருப்பு, இயக்குநர்கள் சாய் ரமணி, சுப்பிரமணிய பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

























