கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்துள்ளபோது தலித் பெண் ஊராட்சி தலைவர் மட்டும் தரையில் அமர்ந்துள்ள படமும் வெளியாகியுள்ளது.
ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான தம்மை, துணைத் தலைவர் தரையில் அமர வைத்து சாதிக் கொடுமைக்கு உள்ளாக்குவதாக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியத்தில் தெற்கு திட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் சுமார் 100 குடும்பத்தினர் ஆதிதிராவிடர் சமுதாயத்தினரும், 500க்கு மேற்பட்ட இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த குடும்பத்தினரும் இருக்கின்றனர்.
தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தலித் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சரவணகுமார் தெற்குத் திட்டை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் உள்பட இந்த ஊராட்சி மன்றத்தில் மொத்தம் ஆறு உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
ஆதிதிராவிடர் சமுதாயத்தைத் சேர்ந்த தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர் சுகந்தி இருவரையும் ஊராட்சி மன்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணை தலைவர் மோகன்ராஜ் தரையில் அமர வைப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் துணைத் தலைவர் ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசு தினத்தன்று ஊராட்சி மன்றத் தலைவரைத் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது ஆலோசனைக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பிறர் நாற்காலிகளில் அமர்ந்துள்ள சூழலில், ஊராட்சி மன்றத் தலைவர் மட்டும் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரையில் அமரவைக்கப்பட்ட அவலம்
ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் இருவரையும் இதுபோன்று புறக்கணிப்பதாக இருவரும் குற்றச்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி சரவணகுமார் கூறுகையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை நான் சங்கடங்களையே சந்தித்து வருகிறேன். கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று ஊராட்சி தலைவர் என்ற அடிப்படையில் தேசிய கோடி ஏற்ற சென்றபோது, என்னைக் கோடி ஏற்ற அனுமதிக்கவில்லை. எனது தந்தை தான் இங்கே கோடி ஏற்றுவார் எனக்கூறி எனக்கு அனுமதி மறுத்துவிட்டார் துணைத் தலைவர் மோகன்ராஜ்.

“பின்னர் ஊராட்சி மன்ற கூட்டத்திற்குத் துணைத் தலைவர் மோகன்ராஜ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார். ஆனால் கூட்டத்திற்குச் செல்லும்போது, அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நாற்காலிகளில் அவரும் மற்ற உறுப்பினர்களையும் அமர்ந்திருப்பார்கள். எனக்கு நாற்காலி இல்லை என்பதைக் காரணம் காட்டி என்னையும், மற்றொரு ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினரான சுகந்தி என்பவரையும் தரையில் அமரச் சொல்வார்.
இதுவரை நடைபெற்ற மூன்று கூட்டங்களில் இதே போன்று எங்கள் இருவரையும் தரையில் அமர வைத்தே மோகன்ராஜ் தலைமையில் கூட்டத்தை நடத்தியுள்ளார். தலைவர் என்ற முறையில் எதாவது கேட்டால், உனக்கு ஏதும் தெரியாது என்று கூறி ஒவ்வொரு முறையும் வாயடைத்து விடுவார். மக்கள் நன்மைக்காக ஒவ்வொரு முறையும் அனுசரித்து வந்தேன்,” என்றார்.
மாவட்ட நிர்வாகம் தரப்பில் இதுகுறித்து விளக்கமளித்த அதிகாரி, “இது போன்ற பிரச்சனை இந்த பஞ்சாயத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர்ந்தபடி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியது. தற்போது இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் சம்மந்தப்பட்டவர் மீது பட்டியல் இனத்தவர், பழங்குடி இனத்தவரும் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் புகார் அளிக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறிய கிராம ஊராட்சி மன்ற செயலர் சிந்துஜா என்பவரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

























