சென்னை: கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ் நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் மதுக்கடைகள் முற்றாக அடைக்கப்பட்டுள்ளன.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டது, ஆனால் ஓரிரு வாரங்களுக்குப் பிறகு அங்கெல்லாம் மதுக்கடைகள் பகுதி நேரமாகத் திறக்கப்பட்டுவிட்டன. ஆந்திரா, கர்நாடகத்தில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மது விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் கடந்த மே 28 முதல் முழுமையாக மது விற்பனை செய்யப்படுகிறது.
மற்றொரு அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் ஜூன் 8-ம் தேதியிலிருந்து மதுக்கடைகள் முழுமையாக திறக்கப்பட்டுவிட்டன. பார்களுக்கு அனுமதி இல்லை.
சுற்றியுள்ள நான்கு மாநிலங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் கடைகள் மூடப்பட்டிருப்பதால், எல்லையோர மாவட்ட மக்கள் மது வாங்க இந்த நான்கு மாநிலங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர்.
சென்னையிலிருந்து கூட ஆயிரக்கணக்கானோர் ஆந்திரா, புதுச்சேரிக்குச் சென்று மொத்தமாக மது வாங்கி வருவதும், சோதனையில் காவலர்களிடம் பிடிபடுவதுமாக உள்ளனர். குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்துக்குள் அமைந்துள்ள ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை, கனகம்மாசத்திரம், தடா, பிச்சாட்டூர் போன்ற பகுதிகளில் மதுக்கடைகளைத் தேடி வரும் சென்னை மக்களின் நடமாட்டம் மிக அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு வரும் ஜூன் 13-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு மீண்டும் முழு ஊரடங்கு வருமா… அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது இன்று அல்லது நாளை தெரிந்தவிடும். இந்த முறை டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்றே அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. பக்கத்து மாநிலங்களில் முழுமையாக மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் நாட்டில் மட்டும் மூடப்பட்டுள்ளதால், வருவாய் இழப்பு மற்றும் மக்கள் அவதி போன்றவற்றை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளுடன் மது விற்பனை அனுமதிக்கப்படும் என்றே தெரிகிறது.
அதேநேரம், ஆன்லைன் மூலம் மது விற்பனைக்கான சாத்தியக் கூறுகளும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.
– வணக்கம் இந்தியா ஸ்பெஷல்

























