பலதரப்பட்ட திரைப்படங்களை வழங்கி குறுகிய காலத்தில் முக்கியமான ஓடிடி தளமாக வளர்ந்துள்ளது ஜீ 5. ‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ ‘மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம்’ இந்த தளத்தில் வெளியான ஒவ்வொரு படமும் ஒரு ரகம். தற்போது அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குநர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா முதல் முறை இயக்கியுள்ள ‘சித்திரைச் செவ்வானம்’ – பிரத்யேகமாக ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 3ல் வெளியாகிறது.

இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சில்வா, “என் சின்ன வயதிலிருந்தே, என்னை இங்கிருப்பவர்கள் தான் என் கைப் பிடித்து அழைத்து சென்றிருக்கிறார்கள். நான் இயக்குநர் ஆக வேண்டும் என என்னை விட வெறியாக இருந்தவர் விஜய்தான். தெரியாத ஆட்களுக்கே உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவர். தலைவா படத்திலிருந்தே எனக்குள் இயக்குநர் இருக்கிறார் என்று ஊக்கம் தந்து, என்னை இயக்குநர் ஆக்கும் வரை உடன் நின்றவர் விஜய்தான். படம் பார்த்து கண் கலங்கி, என்னால் கூட இப்படி செய்திருக்க முடியாது என பாராட்டினார். அவருக்கு நன்றி.
இந்தப் படத்தை பார்த்து நல்ல கதையென்று ஆதரவு தந்த ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி. இந்தப்படத்தில் அண்ணனாக, அப்பாவாக உடன் நின்று தன் சொந்தப்படம் போல் செய்து தந்தார் சமுத்திரகனி அண்ணன். அவரால் தான் இந்தப்படம் முழுமையாக வந்துள்ளது. பூஜாவை விஜய் சார் தான், பார்க்க சொன்னார், அவரைப் பார்த்தவுடன் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. கடகடவென்று பேசிக்கொண்டே இருப்பார். கலைவாணி மேடமிடம் பயிற்சி எடுத்து கொண்டு வந்து நடித்தார். அவரிடமிருந்து இன்புட் எடுத்து, சில காட்சிகள் எடுத்திருக்கிறோம் நன்றாக நடித்திருக்கிறார்.
ரீமா கலிங்கல் திரைக்கதை கேட்டார். ஒவ்வொரு காட்சிக்கும், முன்னதாகவே தயாராகி வந்தார். திரைக்கதையில் சின்ன மாற்றம் செய்தாலும் கேட்பார் அப்போது தான் அவரே சொந்த தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார் என தெரியும், மிக மிக நன்றாக நடித்திருக்கிறார்.
என்னுடன் இணைந்து இப்படத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி,” என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் – நடிகர் சமுத்திரக்கனி, இயக்குநர்கள் விஜய், சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் நாயகி பூஜா கண்ணன் நசிகை சாய் பல்லவியின் தங்கை. ரீமா கல்லிங்கல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்ஸ் இசையமைப்பாளராகவும், பிரவீன் கேஎல்படத்தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் கேஜி வெங்கடேஷ் பணிப்புரிந்துள்ளனர். பிரபல இயக்குநர் விஜய் அவர்கள் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். ஏஎல் அழகப்பன் மற்றும் பி மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர்.

























