ஒரு படம் நமக்குள் என்ன பண்ணிவிடும்? நம்மை எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போய் நிறுத்துமா? எல்லா உறவுகளுக்கும் நமக்குமான அன்பை, பிரிவை, பிரச்னைகளை மனக்கண்ணுக்குள் கொண்டுவருமா? அம்மாவுக்கு போன் பண்ணி அக்கறையாகப் பேச வைக்குமா? அக்கா, தம்பிக்கு நேரம் ஒதுக்கி, “சும்மாதான் பேசினேன்… நல்லாயிருக்கியளா?” எனக் கேட்கச் சொல்லுமா? சிக்கித் திணறும் ஒரு உதவி இயக்குநருக்கு 25,000 பணம் அனுப்பிவைத்து, “என்னால முடிஞ்சது இவ்வளவுதாண்டா… இப்போதைக்குச் சமாளி… அடுத்து வாரதைப் பார்த்துக்கலாம்” எனத் தைரியமூட்டுமா?
அன்பைத் தவிர இந்த மண்ணில் நாம் நிகழ்த்தப் போகிற மகத்துவங்கள் வேறு எதுவுமே இல்லை என உணர்ந்து ஒவ்வொருவருக்கும் போன் போட்டு பேச வைக்குமா? இக்கட்டில் உதவியவர்களை நெஞ்சில் நிறுத்தி நன்றி சொல்லத் தூண்டுமா? மனதார மன்னிப்பு கேட்க வலியுறுத்துமா? எதிரே வருகிற ஒருவரைப் பார்த்து புன்னகைக்க வைக்குமா? ஸ்கூட்டியில் கிளம்பும் மனைவிக்கு டாட்டா காட்ட பழக்குமா? சாப்பிடாமல் கிடந்து தன்னைச் சரிசெய்துகொள்ளும் ஒரு நாயைப் போல் அப்படியே அமைதியாகக் கிடந்து எல்லோர் குறித்தும் ஏங்க வைக்குமா?
இவை எல்லாவற்றையும் செய்கிறது J.பேபி படம்.
புத்தகத்தை கீழே வைத்த பிறகும் அதன் தாக்கங்கள் அப்படியே நெஞ்சில் நிற்பதைப் போல் படம் பார்த்து வீடு வந்த பிறகும் அதற்கும் நமக்குமான தொடர்பு அறுபடவே இல்லை. ஊர்வசி அம்மா உள்ளிட்ட அத்தனை பாத்திரங்களையும் உச்சி முகரலாம். இந்தப் படைப்புக்குத் தூணாக துணையாக இருந்த பா.ரஞ்சித் உள்ளிட்ட அத்தனை பேரையும் கைக்கூப்பலாம். இயக்குநர் சுரேஷ் மாரியை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். J.பேபி உங்கள் உள் மனதின் எல்லா கதவுகளையும் நிச்சயம் திறக்கும்…!
– இரா சரவணன்

























