டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் 17 வது மக்களவைக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்தது.
அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் விஞ்யான் பவனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவைத் தேர்தல் அட்டவணையை அறிவித்தார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் இருந்தனர். நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 7 கட்டங்களாக தேர்தல் – ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
அதன் விவரம்:
மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது.
94 தொகுதிகளுக்கான 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது.
96 தொகுதிகளுக்கான 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.
49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெறுகிறது.
57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7 ஆம் கட்டம் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒரே கட்ட தேர்தலுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம்:

* வேட்புமனு தாக்கல் தொடக்கம்- மார்ச் 20
* வேட்புமனு தாக்கல் முடிவு- மார்ச் 27
* வேட்புமனு பரிசீலனை – மார்ச் 28
* வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
* வாக்குப்பதிவு- ஏப்ரல் 19
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி:
அதேபோல் ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதியும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் மே 13 ஆம் தேதியும், 32 தொகுதிகள் கொண்ட சிக்கிம்மில் ஏப்ரல் 19 ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
147 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் மட்டும் மே 13, மே 20 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 4-ல் நடத்தப்படுகிறது.
ஜம்மு – காஷமீர் தேர்தல்
மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: பிஹார் (1), குஜராத் (5), ஹரியாணா (1), ஜார்க்கண்ட் (1), மகாராஷ்டிரா (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (4), மேற்கு வங்கம் (2), தெலங்கானா (1), இமாச்சல் பிரதேசம் (6), ராஜஸ்தான் (1), கர்நாடகா (1), தமிழ்நாடு (1) என மொத்தம் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில் விஜயதரணி ராஜினாமாவால் காலியான விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

























