டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 6-வது நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் கலைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகமே உற்றுப் பார்க்கும் ஒரு மாபெரும் போராட்டமாக இது உருவெடுத்துள்ளது,
நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.
ஆனால், டெல்லி-அரியானா எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி-உத்தரபிரதேச எல்லையான காசியாபாத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

திட்டமிட்டு மறைப்பு?
இதற்கிடையே, கடந்த ஒரு வார காலமாக நடந்து வரும் இந்தப் போராட்டத்தை இந்திய மீடியா நிறுவனங்கள் திட்டமிட்டு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்கள் இந்தியாவின் பெரு முதலாளிகளுக்குச் சொந்தமாக உள்ளன. இந்த புதிய வேளாண் சட்டங்கள் இந்த பெரு முதலாளிகளுக்குச் சாதமாகவே மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ளதாக விமர்சனம் உள்ளது. விவசாயிகளின் போராட்டம் என்பது மோடி அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் அதனால் பலன் பெரும் பெரு முதலாளிகளுக்கு எதிரானதாகவே உள்ளதால், ஊடக நிறுவனங்கள் இந்தகப் போராட்டத்தை கண்டு கொள்ளாமலும், மூடி மறைத்தும் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதை நிரூபிக்கும் வகையில், நாட்டின் முன்னணி ஊடகங்கள் எதிலும் இந்த விவசாயப் போராட்டம் குறித்த செய்திகளே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

























