பொருளாதார அதிகாரமே அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கின்ற நவீன கார்ப்பரேட் உலகமயச் சூழலில் ‘தொழிலாளர் ஒற்றுமை’ எனும் கம்யூனிச அரிவாளை தனது திரைப்படைப்பில் கூர் தீட்டி தந்து விட்டுப் போயிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
தோழர் பி.எஸ்.ஆர் (பி.சீனிவாசராவ்) பெயரிலான சங்கம், கூட்டுப் பண்ணை விவசாயம், தலித் மக்களுக்கான நில உரிமை என 1970களுக்கு முந்தைய கீழத்தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட்டுகளின் முன்னெடுப்புகளை இன்றைய சூழலுக்கேற்ப முன்மொழிகிறது ‘லாபம்”.
தென்பரையில் தோழர் பி.எஸ்.ஆர் கட்டமைத்த விவசாயிகள் சங்கத்திற்கும் வெண்மணியில் ஒரே குடிசைக்குள் 44 உயிர்கள் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரத்திற்கும் இடைப்பட்ட நில உரிமைப் போராட்டத்தில் செங்குருதி சிந்திய கம்யூனிசத் தோழர்கள் ஏராளம்.
தேர்தல் அரசியலில் ஏற்பட்ட தேய்மானங்களால், வரலாற்றுக் காலத்தின் சக்கரங்கள் அடுத்த தலைமுறைக்கானப் பாதைகளில் அத்தனை வேகமாகப் பயணிக்க முடியவில்லை. எனினும், விடிய விடிய நடத்தப்பட்ட கலை இரவுகளும், வீதி நாடகங்களும் சிவப்பு வரலாற்றை நினைவு கூர்ந்து வந்தன.
தற்காலச் சூழலுக்கேற்ப, பொதுவுடைமை சித்தாந்தத்தைக் கையாள வேண்டியதன் தேவையையும் அதற்கான உத்தியையும் தமிழ் சினிமாவுக்குரிய திரைமொழியில் ‘லாபம்’ வெளிப்படுத்தியிருக்கிறது. நாயகன் விஜய்சேதுபதி பேசும் காட்சிகளில் இயக்குநர் ஜனநாதனுடன் நேரில் உரையாடிய நினைவுகள் உயிர்ப்பெறுகின்றன.
செவ்வணக்கம் தோழரே..
– கோவி லெனின்

























