கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. காபியின் விலை ரூ 100ஐத் தாண்டிவிட்டது. இட்லியின் விலை ரூ 350ஆக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது ஒருபக்கம், அவை பொதுமக்களுக்கு கிடைப்பதே அரிதாகிவிட்டது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ 420, டீசல் விலை ரூ 400 ஆக உள்ளது.
ஒரு லிட்டர் பால் ரூ 350, ஒரு முட்டை ரூ 40, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ 600, மாட்டிறைச்சி ரூ 900 வரை விற்கப்படுகிறது.
இந்த நிலையில் வரும் நாட்களில் அரிசியின் விலை கிலோ ரூ 400க்கும் மேல் உயரக் கூடும் என அந்நாட்டின் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “உணவுப்பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடுகின்றன. அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 400 ரூபாயை தாண்டும். வெறும் விலை கட்டுப்பாடுகள் வேலை செய்யாது மற்றும் செயல்படாது. அனைவருக்கும் அடிப்படை உணவு வினியோகத்தை உறுதி செய்ய தீவிர தலையீடு அவசியம்,” என குறிப்பிட்டுள்ளார்.

























