காபூல்: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டன. இப்போது முழுக்க முழுக்க தலிபான்களின் கட்டுப்பாட்டில், ஆட்சியில் உள்ளது அந்நாடு.
தலிபான்கள் ஆட்சியில் ஆப்கன் மக்கள் எப்படி உள்ளனர்?
‘அடிப்படைச் சுதந்திரத்தை இழந்து, உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர்’ என்பதுதான் இப்போதைக்கு அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள். மக்களை தலிபான்கள் தினம் தினம் தாக்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் ஆப்கன் மக்களில் பெரும்பாலானோர் எப்படியாவது வேறு நாட்டுக்கு – அமெரிக்கா என்றல்ல, பக்கத்தில் உள்ள உஸ்பெக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் கூட- செல்ல பெரும் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
அடிப்படை உரிமைகள் மட்டுமல்ல, அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கே அங்கே வழியில்லாததால், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும் சிரமமாக இருப்பதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பெரும் முக்கியத்துவமும், வணிக வசதி வாய்ப்பும் நிறைந்த நகராகக் கருதப்பட்ட ஆப்கனின் மஸார் இ ஷெரீப் நகரம் கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலையில் உள்ளது. அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் ஆப்கன் எல்லையைத் தேடி ஓடுகின்றனர். அங்கிருந்து ஏதாவது ஒரு நாட்டுக்குத் தப்பித்தால் போதும் என்பதே அவர்கள் நோக்கம்.
தலைநகர் காபூலில் இந்த நிமிடம் வரை நிலையற்ற தன்மையே நிலவுகிறது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. வெளியில் தப்பிச்செல்லவும் முடியவில்லை. மீறிச் செல்பவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகின்றனர் தலிபான்கள். அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானின் பல நகரங்களிலும் வங்கிகள் ஒரு மாதமாக மூடப்பட்டிருப்பதால் மக்களிடம் பணப் புழக்கமும் இல்லாத நிலை உள்ளது.

பாழடைந்த கட்டிடங்களிலும், போரில் சேதமுற்ற கட்டிடங்களிலும் துணிகளை கூரையாக பாவித்து மக்கள் ஒண்டிக்கிடக்கும் நிலை உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஹெராத், காந்தகார் போன்ற நகரங்கள் முன்பு ஓரளவு சுதந்திரமாக இயங்கி வந்தன. ஆனால் தலிபான்கள் பிடிக்குள் வந்த பிறகு இந்த நகரங்கள் முற்றாக முடங்கிப் போயுள்ளன. அத்தனை சந்தைகளும் மூடப்பட்டிருப்பதால் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.

பெண்களின் நிலை மிக மோசமாக உள்ளதாக பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பெண்கள் 6ம் வகுப்பு வரை மட்டும் படிக்க வேண்டும் என்பதில் தலிபான்கள் பிடிவாதமாக உள்ளனர். மருத்துவத்துறையில் மட்டும் பெண்கள் பணியாற்றலாம் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால் இப்போது அதுவும் கேள்விக்குறியாகிவிட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இப்போதைக்கு ஆப்கன் மக்கள் தங்கள் பிரச்சினைக்கு ஒரே தீர்வாகக் கருதுவது, உலகில் பாகிஸ்தான் தவிர வேறு ஏதாவது ஒரு நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட வேண்டும் என்பதே!
– வணக்கம் இந்தியா ஸ்பெஷல்

























