நடிப்பு: சசிகுமார், சூரி, சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ வில்சன்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: கே குமார்
எழுத்து – இயக்கம்: துரை செந்தில்குமார்
தேனி பக்கம் கோம்பை கிராமத்தில் இரண்டு நெருங்கிய நண்பர்கள். யாருமற்ற சூரிக்கு இவர்கள் இருவரும்தான் பெரும் ஆதரவு. ஒருகட்டத்தில் நண்பர்களுக்குள் மோதல். ஒரு நண்பனை போட்டுத் தள்ளுகிறான் இன்னொருவன். அதற்கு சாட்சியாக நிற்கும் சூரி என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கருடனின் கதை.
கதை ஒன்றும் அத்தனை புதிதில்லை என்றாலும், திரைக்கதையும் படமாக்கிய விதமும், தேர்ந்த நடிப்பும் நம்மை படத்துடன் ஒன்றிப் போக வைக்கின்றன.
நண்பர்களாக சசிகுமார், உண்ணி முகுந்தன். சசிக்குமார்தான் கிட்டத்தட்ட படத்தின் நாயகன். நேர்மையும் துணிச்சலும் நட்புக்காக உயிரையும் தரும் உன்னதமான பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.

சூரிக்கு இன்னொரு தரமான வேடம். எந்த இடத்திலும் மிகையாக நடித்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார். அவருக்கான அந்த இடைவெளைக் காட்சி பிரமாதம். மெல்லமெல்ல சூரியின் பாத்திரத்தை உயர்த்திக் கொண்டு வந்து, நச்சென்று முடித்த விதத்தில் இயக்குநர் பார்வையாளர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.
மனசாட்சி உள்ள, ஆனால் எதுவும் செய்ய முடியாத காவல் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி வழக்கம் போல தனி இடம் பிடித்துவிடுகிறார்.
இந்தக் கதைக்கு உன்னி முகுந்தன் சரியான தேர்வுதான என யோசிக்க வைத்து விட்டார்!
ஷிவதாவுக்கு அழுத்தமான வேடம். உணர்ந்து நடித்திருக்கிறார்.
தேனி மாவட்டத்தில் தங்க பாண்டியன் என்ற பெயரில் கோவை தமிழ் பேசி வில்லத்தனம் காட்டுகிறார் ஆர் வி உதயகுமார்!
ரேவதி ஷர்மா, வடிவுக்கரசி, மைம் கோபி, முத்துராமன் என அனைவருமே கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் இடது, வலது கரங்களாக பங்களித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் மற்றும் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. திருவிழா காட்சிகள், அந்த இடைவேளைக்கு முந்தையா காட்சிகளில் மிரட்டுகிறது இசை.
கலை, படத்தொகுப்பு என அனைத்திலும் நல்ல கவனம் செலுத்தி இருப்பது தெரிகிறது.
அதிரடி பழிவாங்கல் கதையாக மாறிவிடுமோ என நினைக்கும் போதே, படத்தை, வெகு லாவகமாக மாதிரி மனத்தைத் தொடும் படைப்பாக்கி இருக்கிறார் இயக்குநர்.
நாயகனாக சூரியின் பயணம் அழுத்தமாக தொடர உதவி இருக்கிறது இந்த கருடன்!
Rating: 4.0/5.0

























