நடிகர்கள்: விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா
ஒளிப்பதிவு: ரவி வர்மன்
இசை: ஏஆர் ரஹ்மான்
தயாரிப்பு: சுபாஷ்கரன் – மணிரத்னம்
கதை: அமரர் கல்கி
இயக்கம்: மணிரத்னம்
பொன்னியின் செல்வன்… திரையுலகினரின் 70 ஆண்டு காலக் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. அமரர் கல்கியின் காலத்தை வென்ற காவியமான பொன்னியின் செல்வன் புதினம் அழகிய பிரமாண்டமான திரைப்படமாக வெளியாகி உலகையே பேச வைத்திருக்கிறது.
உலகம் அறிந்த கதை இது. சோழர் குலம் உன்னத நிலையை அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கிறது இந்தக் கதை. கிபி 980ம் ஆண்டு. பிற்காலச் சோழர்களில் குறிப்பிடத்தக்கவர் இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தர சோழர். இவர்தான் அப்போது குமரியிலிருந்து வட பெண்ணை வரை பரவியிருந்த சோழ சாம்ராஜ்யத்தின் மன்னர். இவருக்கு ஆதித்த கரிகாலன், குந்தவை, அருண்மொழி வர்மன் என மூன்று வாரிசுகள். மூத்தவன் ஆதித்த கரிகாலன் மாபெரும் வீரன். இளம் வயதிலேயே போர்க்களம் கண்டு வீரபாண்டியன் தலையை வெட்டி, அதை வாளில் செருகி ஊர்வலம் வந்தவன். வடக்கே இராட்டிரகூடர்களை விரட்டியடித்தவன். எவராலும் வெல்ல முடியாத உண்மையான மாவீரன். குந்தவை, அறிவும் அழகும் அரசியல் தெளிவும் கொண்டவள். இளையவன் அருண்மொழி வீரமும் ஈரமும் கொண்ட பேரழகன். பொன்னியின் செல்வன் என சோழமக்களால் அன்போடு அழைக்கப்படுபவன். அனைவரின் நேசத்துக்கும் உரியவன்.
இக்கதை நடக்கும் காலத்தில் சோழ நாட்டு வான்பரப்பில் ஒரு வால் நட்சத்திரம் தோன்றி நாளுக்கு நாள் ஒளியைப் பெருக்கிக் கொண்டே போகிறது. இது அரச குலத்துக்கு பேராபத்து… அரச ரத்தம் கேட்பதற்கான அறிகுறி என்பது நம்பிக்கை.
சுந்தரசோழர் அப்போது நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிறார். பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் வடதிசைப் படையின் அதிபதியாக போர்க்களத்தில் அடுத்தடுத்த வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறான். அருள்மொழி வர்மன் தென்திசைப் படையின் தலைவனாக இலங்கைக்குச் சென்று போர் புரிந்துகொண்டிருந்தான்.
இத்தருணத்தில் சுந்தர சோழருக்கும் அவருடைய மகன்களுக்கும் எதிராக மிகப் பெரிய சதி உருவாகிறது. இந்தச் சதியில் ஈடுபடுவோர் ஒருபக்கம் ஆதித்தனால் தலைகொய்யப்பட்ட வீரபாண்டியனின் ஆபத்துதவிகள். இன்னொரு பக்கம் சுந்தரசோழருக்கு ஆதரவாக நின்ற சிற்றரசர்கள். குறிப்பாக பழுவேட்டரையர்கள்.

சுந்தரசோழரின் பெரிய தந்தை கண்டாராதித்த சோழனின் மகன் மதுராந்தகன் சோழ சிம்மாசனத்தின் மீது ஆசை கொள்கிறான். சோழ ராஜ்யத்தில் செல்வாக்கு பெற்றிருந்த அண்ணன் தம்பிகளான பெரிய பழுவேட்டரையரும் சிறிய பழுவேட்டரையரும் கூடவே இன்னும் சில சிற்றரசர்களும் சேர்ந்து மதுராந்தகனை அரியணை ஏற்ற கடம்பூர் அரண்மனையில் ரகசியத் திட்டம் தீட்டுகிறார்கள்.
மற்றொரு புறம் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டிக் கொன்ற ஆதித்த கரிகாலனைப் பழிவாங்க பழுவேட்டரையரின் இளம் மனைவி நந்தினி (முதலில் ஆதித்தனைக் காதலித்து, பின் வீரபாண்டியன் மனைவியாகி அவன் தலை கொய்யப்பட்ட பிறகு பழுவேட்டரையரை மணந்தவள்) பாண்டிய தேசத்து ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சோழ வம்சத்தையே அழிக்கச் சதி செய்கிறாள்.
இந்தத் தருணத்தில்தான், ஆதித்த கரிகாலன் கொடுத்த ஓலை மற்றும் கடம்பூர் ரகசிய சதி தகவலுடன் தஞ்சை வந்து சேருகிறான் வல்லவரையன் வந்தியத் தேவன். மன்னர் சுந்தர சோழருக்கு ஒரு ஓலையும், குந்தவைக்கு ஒரு ஓலையும் அவன் கொண்டு வருகிறான். வழியில் நந்தினியைச் சந்தித்து அவள் அழகில் மயங்குகிறான். ஆனால் சட்டென சுதாரித்து பல தடைகள் கடந்து மன்னரைச் சந்தித்து ஓலை கொடுத்துவிட்டு, குந்தவையச் சந்திக்கப் போகிறான். அவளது அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகிறான். வந்தியத்தேவனுக்கு குந்தவை ஒரு வேலையைத் தருகிறாள். அது, ஈழத்திலிருக்கும் அருண்மொழியை பத்திரமாக தஞ்சைக்குத் திரும்ப வைப்பது. அந்தப் பணியை ஏற்று ஈழம் சென்று அருண்மொழியைச் சந்திக்கிறான் வல்லவரையன்.
இன்னொரு பக்கம், பழுவேட்டரையர்கள் தந்திரமாக மன்னரின் ஆணைப் பெற்று அருண்மொழியைக் கைது செய்து அழைத்து வர மரக்கலங்களை ஈழம் அனுப்புகின்றனர்.
அருண்மொழி தஞ்சைக்குத் திரும்பக் கூடாது என்ற முதன் மந்திரி அநிருத்த பிரம்மராயர் ஓலையுடன் ஆழ்வார்க்கடியான் இலங்கை சென்று சேர்கிறான்.
அருண்மொழி உடனடியாக காஞ்சிக்கு வரவேண்டும் என்ற ஆதித்த கரிகாலனின் ஆணையுடன் பார்த்திபேந்திரன் ஒருபக்கம் இலங்கைக்கு வருகிறான்.
நான்கு வெவ்வேறு ஆணைகள், அறிவுரைகள். இவற்றை அருண்மொழி ஏற்றானா… தஞ்சை திரும்பினானா என்ற கேள்வியோடு முடிகிறது பொன்னியின் செல்வன் முதல் பாகம்.
கல்கியின் பொன்னியின் செல்வன் உண்மையாகவே ஒரு பெருங்கதை. பல தலைமுறைகளின் வரலாறுகள் அதில் பொதிந்திருக்கும். அதைத் திரைக்கேற்ப மாற்றுவது மிகப்பெரிய சவால் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி மாற்றியதில் சில பாத்திரங்கள், பல நிகழ்வுகள் திரைக்கதைில் விடுபட்டுப்போயிருப்பதை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
வந்தியத் தேவன்தான் இந்தக் கதையின் நாயகன். மைய இழை. கல்கி எழுத்தில் சொன்னதைப் போலவே ஒவ்வொரு பாத்திரமும் அவன் வழியேதான் நமக்கு திரையிலும் அறிமுகமாகின்றன.
மணிரத்னம் படம்தானா இது?
உண்மையில் நம்ப முடியவில்லை. தனது முந்தைய படங்களின் சிறு நிழல் கூட படாதவாறு புத்தம் புதிதாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்னம். காரணம் கல்கி என்ற மாபெரும் படைப்பாளி அவரை கதைக்குத் தேவையானதை மட்டும் தந்தால் போதும் எனக் கட்டிப்போட்டிருக்கிறார் என்று நம்புகிறேன்.
கதையில் வெறும் வர்ணனைகளாக, பேச்சோடு பேச்சாக வரும் ராஷ்ட்ரகூடப் போர், நுளம்பாடி போர்க்களம், ஈழப் போர்க்களச் சம்பவங்களை இன்றைய தலைமுறையை மனதில் கொண்டு ஹாலிவுட் தரத்துக்கு ஆக்சன் காட்சிகளாகக் கொடுத்துள்ளது நல்ல உத்தி.
விக்ரம் என்ற நடிப்பு அரக்கனுக்கு இன்னொரு சரியான வாய்ப்பு. அதகளப்படுத்தியிருக்கிறார். அவரது அறிமுகக் காட்சியும், ராஷ்ட்ரகூட மன்னனை அவர் நடத்தும் விதமும்… சிலிர்ப்பு.

நந்தினி என்ற தீ மனதில் எரிவதை அவர் வெளிப்படுத்தும் விதம், கல்கியின் வர்ணனைகளை கண்முன் நிறுத்தின.
விக்ரமுக்கு அடுத்து நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய். அத்தனை பொருத்தமான தேர்வு. வேறு யாரையும் இந்தப் பாத்திரத்துக்கு கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு அழகினாலும் நடிப்பினாலும் கட்டிப்போட்டுவிட்டார்.
வந்தியத் தேவனின் வீரம், துடுக்குத் தனம், அலட்சியம், குறும்பு, அழகை ரசிக்கும் இளமை… அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெறுகிறார் கார்த்தி.
அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி. மிகச் சரியான தேர்வு என்பதை தனது கம்பீரமான நடிப்பால் நிரூபித்திருக்கிறார்.
குந்தவையாக த்ரிஷா. பூங்குழலி (ஐஸ்வர்யா லட்சுமி), பழுவேட்டரையர்கள் (சரத்குமார், பார்த்திபன்), மலையமான் (லால்), பெரிய வேளார் (பிரபு), பார்த்திபேந்திரன் (விக்ரம் பிரபு), செம்பியன் மாதேவி (ஜெயசித்ரா), ஆழ்வார்க்கடியான் (ஜெயராம்) என யாரும் ஏமாற்றவில்லை, வானதி தவிர.

கடைசியில் வரும் கடல் கொந்தளிப்பு காட்சியெல்லாம், நாம் பார்ப்பது தமிழ்ப் படம்தானா என பிரமிக்க வைத்தது. ரவி வர்மன், தோட்டா தரணியின் உழைப்பு அபாரம்.
சரி, கல்கியின் பொன்னியின் செல்வனை மணிரத்னம் படமாக்கிய விதத்தில் குறைகளே இல்லையா…
இருக்கின்றன.
குந்தவை – வந்தியத்தேவன் பழையாறைச் சந்திப்பின்போது, அப்போதுதான் முதன்முதலில் பார்த்துக் கொள்வதைப் போல இருவரின் பேச்சும் படத்தில் இருக்கும். ஆனால் அதற்கு முன்பே குடந்தை சோதிடர் வீடு மற்றும் ஆற்றங்கரையில் அறிமுகமாகி பேசியதை ஓரிரு வசனங்கள் மூலம் தொடர்புபடுத்தியிருக்கலாம்.
புதினத்தின் மிக முக்கிய காட்சிகளுள் ஒன்று, வந்தியத்தேவன் – பூங்குழலி அறிமுகக் காட்சி. அதைக் காட்டாமல், இருவரும் படகில் செல்லும் காட்சியை திடுமென்று காட்டுவது.
இலங்கை மணிமுடியை வந்தியத் தேவனை சாட்சியாக வைத்துத்தான் மறுப்பார் அருண்மொழி. படத்தில் அந்தக் காட்சியில் வந்தியத் தேவன் இடம்பெறவே இல்லை.
முக்கியமாக, குந்தவை காஞ்சிக்குச் செல்லவே இல்லை. ஈழத்திலிருந்து திரும்பி வந்த பிறகு வந்தியத் தேவன்தான் செல்வான்.
பழுவேட்டரையர் – நந்தினி காட்சிகள், கல்கியின் எழுத்தில் ஏற்படுத்திய உணர்வை, திரையில் தரத் தவறியிருப்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
இந்தப் படத்தின் பிழைகளில் சிகரம்… ஈழம் என்ற வார்த்தையை முற்றாகத் தவிர்த்திருப்பது. சிங்களர் பகுதியை இலங்கை என்றும், தமிழர் நிலத்தை ஈழம் என்றும் கல்கி எழுதியதைத்தானே பயன்படுத்தப் போகிறார் மணிரத்னம்… அதற்கு ஏன் இவ்வளவு பயம்?
சோழனின் புலிக்கொடியையும் பாண்டியனின் மீன் கொடியையும் தெளிவாகக் காட்டுவதில் என்ன பிரச்சினை மணிரத்னத்துக்கு?
இந்தப் படத்தின் இசை, பாடல் வரிகள் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என்பதில் இரண்டாவது கருத்தில்லை. ‘இவர் இசையமைத்திருக்க வேண்டும்… அவர் பாடல் எழுதியிருக்க வேண்டும்’ என்று சொல்ல வரவில்லை. யாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது இயக்குநரின் வசதி. ஆனால் அந்த இணையின் இறுதிவடிவம் ரசிக்கும்படி இல்லை என்று சொல்லும் உரிமை படம் பார்த்த அனைவருக்கும் உள்ளதே!
ஆனால் பொன்னியின் செல்வனை திரையில் ரசிக்கும்போது, இந்தக் குறைகள் சிறு நெருடல்களாகக் கடந்து போகின்றன. அந்தப் பெருங்கதைக்கு, அதன் படைப்பாளியான அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு செய்யப்பட்ட ஒரு பிரமாண்ட அர்ப்பணிப்பாகவே இந்தப் படத்தை பெரும்பாலானோர் எடுத்துக் கொண்டது, படத்தின் வசூலில் தெரிகிறது!
பொன்னியின் செல்வன் நிச்சயம் பாராட்டத்தக்க முயற்சி. கல்கியின் படைப்புக்கு முடிந்தவரை நியாயம் செய்திருக்கிறார்கள். சுபாஷ்கரன் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு நிறைய தேவை. இன்னும் இங்கு கடல் புறாக்கள், ஜல தீபங்கள், வேல் பாரிகள் நிறைய இருக்கின்றன.
பொன்னியின் செல்வன் குழுவுக்கு பாராட்டுகள்!
மதிப்பீடு: 4.0/5.0
- சே சங்கர்

























